காஸாவை மொத்தமாக கைப்பற்றுவோம்... ட்ரம்பின் பேச்சால் வெடித்த சர்ச்சை
பாலஸ்தீன மக்கள் காஸாவில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என கூறி வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தற்போது காஸாவை மொத்தமாக கைப்பற்றுவோம் என அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன அழிப்புக்கு ஒப்புதல்
ட்ரம்பின் இந்த பேச்சு பாலஸ்தீனியர்களின் இன அழிப்புக்கு ஒப்புதல் அளித்தல் என்றே விமர்சிக்கப்படுகிறது. கிரீன்லாந்து மற்றும் பனாமாவை கைப்பற்றுவோம் என முன்னர் அச்சுறுத்திய ட்ரம்ப், அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாற வேண்டும் என்றும் கூறி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அந்த வரிசையில் தற்போது காஸா பகுதியை மொத்தமாக கைப்பற்ற வேண்டும் என்கிறார். மேலும், அமெரிக்க இராணுவம் காஸாவில் களமிறக்கப்படுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலளிக்கவும் மறுத்துவிட்டார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான ஊடக சந்திப்பின் போதே காஸா தொடர்பில் தமது கருத்தை ட்ரம்ப் முன்வைத்துள்ளார். பாலஸ்தீனியர்கள் காஸாவிற்குத் திரும்பிச் செல்ல விரும்புவதற்கான ஒரே காரணம், அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை என்பதுதால் தான் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காஸா தற்போது கட்டிட இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பாலஸ்தீன மக்கள் வேறு எங்கேனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் தங்கள் வாழ்க்கையை வாழ முடியும் என்றார்.
நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்காக
காஸாவை மொத்தமாக சொந்தமாக்கி, நாங்கள் அதை மேம்படுத்தப் போகிறோம், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம், மேலும் இது முழு மத்திய கிழக்கு நாடுகளும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றார்.
ஆனால் காஸாவில் வசிக்கும் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்காக ட்ரம்ப் கட்டாயப்படுத்தியதன் பின்னரே, தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜோர்தான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் ட்ரம்பின் கோரிக்கையை அரபு தலைவர்கள் மொத்தமாக மறுத்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மட்டும் வரவேற்றுள்ளார். காஸா தொடர்பில் ட்ரம்பின் இந்த முடிவு வரலாற்றை மொத்தமாக புரட்டிப்போடும் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |