பிரபல ஆசிய நாடொன்றின் புலம்பெயர் மக்களை நாடுகடத்தத் தொடங்கிய ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் உள்ள சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர் மக்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கடுமையான நிலைப்பாடு காரணமாக தற்போது இந்தியர்களை நாடுகடத்தும் பணி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைதூர இலக்கு இந்தியா
வெளியான தகவலின் அடிப்படையில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று புலம்பெயர் மக்களுடன் இந்தியா புறப்படும் என்றே தெரிய வந்துள்ளது. C-17 விமானம் இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டதாகவும், குறைந்தது 24 மணிநேரத்திற்குள் அது வந்து சேராது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொலைதூர இலக்கு இந்தியா என்பதாலையே தாமதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த விமானங்கள் இயக்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுவரை, குவாத்தமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸுக்கு புலம்பெயர்ந்தோருடன் இராணுவ விமானங்கள் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே முதல்முறையாக சட்டவிரோத புலம்பெயர் மக்களை அடையாளம் கண்டு அவர்களை இராணுவ விமானத்தில் நாடுகடத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
18,000 புலம்பெயர் இந்தியர்கள்
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடனான தொலைபேசி உரையாடலக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத இந்திய புலம்பெயர் மக்களை திரும்பப் பெறுவதில் சரியான முடிவெடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார்.
இதுவரை 18,000 ஆவணமற்ற புலம்பெயர் இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இனி படிப்படியாக நாடுகடத்தப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஆவணமற்ற புலம்பெயர் இந்தியர்களை நாடுகடத்தும் முடிவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |