கடும் விரக்தியில் ட்ரம்ப்... ஈரான் போரில் இருந்து வெளியேறத் தீவிர ஆலோசனை
ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் என சவுதி அரேபியா தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் தணிய வேண்டும்
ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் விவாதித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பலனளிக்கும் என்பது குறித்துச் சந்தேகம் வெளியிட்டார்.

மேலும், பேச்சுவார்த்தைகளுக்குப் பதிலாக, முழு அளவிலான போரை மீண்டும் தொடங்குவது உட்பட, ஈரானின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
ஆனால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்த சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், தமது சகோதரர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விருப்பத்தை இருவருடனும் விவாதித்துள்ளார்.
அதில், ஈரான் தொடர்பான மோதல் தணிய வேண்டும் என்று சவுதி அரேபியா விரும்புகிறது என்றும், இம்மோதல் நீடிப்பது பெரும் அபாயங்களுக்கு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது காலக்கெடுவையும் கடந்து நீண்டுவிட்ட ஒரு மோதலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப் தீவிரமாகவே தேடும் வேளையில், அவர் எதிர்கொள்ளும் முரண்பட்ட சூழ்நிலைகளை இவை வலியுறுத்துவதாகவே அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு சக குடியரசுக் கட்சியினரிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அப்போர் உண்மையில் விரிவடைந்து வருவதாகவே தோன்றுகிறது; பிராந்தியத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இதில் இழுக்கப்பட்டுள்ளன.
போரை நிறுத்தும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ட்ரம்ப் கூறி வந்தாலும், உண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் இதில் இருந்து வெளியேற முடியாமல் கடும் விரக்தியில் இருப்பதாகவே அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும், ஹார்முஸ் நீரிணை மீது தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசவும் ஈரான் நிர்வாகத்தின் முக்கியப் பிரமுகர்கள் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் இருப்பதாகச் சில அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
தனது கோரிக்கைகளுக்கு ஈரான் பணிய மறுப்பதால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார். இதன் விளைவாக, அவர் திரைமறைவில் ஆத்திரம் கொண்ட சந்திப்புகளையும், தனது நேச நாடுகளுடன் வசவுகள் நிறைந்த தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரில் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதே அதற்கான ஒரே வழி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே
உண்மையில், ஈரானிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல்களால், ட்ரம்ப் தனது சொந்தத் திட்டங்களையே மாற்றியமைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.மிக சமீபத்தில் துருக்கியிலிருந்து அவர் திரும்பும் பயணத்தின்போது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை மாற்றியமைத்தது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரானுக்கு பயந்து அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தையே மாற்றும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, ஈரான் போர், ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே முற்றிலுமாக விழுங்கிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பலர் தற்போது கவலைப்படுகிறார்கள்.
அமெரிக்க மக்களில் வெறும் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ஈரானுடனான ட்ரம்பின் போரை ஆதரிக்கின்றனர். இந்தப் மோதலின்போது ட்ரம்பை பெருமளவில் ஆதரித்து வந்தாலும், எரிபொருள் விலை உயர்வு இடைக்காலத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.

இதை ட்ரம்பிடமும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அவசரமாக முயற்சித்து வரும் நிலையில், தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன.
மாறாக, ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பேசி வந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் பெயரளவிலான தலைவர்களாக மட்டுமே நீடிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தற்போது அஞ்சுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |