எதிரிகள் மரணத்தை ருசிப்பார்கள்... ட்ரம்பிற்கு ஈராக்கின் துணை இராணுவப் படை பகிரங்க எச்சரிக்கை
ஈரான் மீது ட்ரம்ப் நிர்வாகம் தாக்குதல் நடத்தினால், தங்களின் எதிரிகள் மரணத்தின் மிகக் கொடிய வடிவங்களைச் சுவைப்பார்கள் என்று ஹிஸ்புல்லா எச்சரித்துள்ளது.
முழுமையான போருக்கு
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் நெருக்கமான தொடர்புடைய ஈராக்கின் துணை ராணுவக் குழுவான கதாயிப் ஹிஸ்புல்லா என்ற அமைப்பே தற்போது கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், ஒரு சாத்தியமான முழுமையான போருக்குத் தயாராகுமாறும் அதன் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஈரானை அழிக்க இருளின் சக்திகள் அனைத்தும் ஒன்றுகூடி வருவதாக அந்தக் குழுவின் தலைவரான அபு ஹுசைன் அல்-ஹமிதாவி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிரான போர் என்பது வெறும் ஒரு பூங்காவில் நடந்து செல்வது போன்று இருக்காது என்பதை எதிரிகளுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மாறாக, நீங்கள் மரணத்தின் மிகவும் கசப்பான வடிவங்களை ருசிப்பீர்கள், எங்கள் பிராந்தியத்தில் உங்களில் எவரும் மிஞ்சமாட்டீர்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் நுழைந்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையிலேயே அல்-ஹமிதாவியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலுடன், யுஎஸ்எஸ் ஃபிராங்க் இ. பீட்டர்சன், ஜூனியர், யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி ஆகிய ஏவுகணை அழிப்பு கப்பல்களும் மத்திய கிழக்கில் நுழைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப கடந்த வாரம் தெரிவிக்கையில், ஈரான் நோக்கி அந்த திசையில் ஒரு பெரிய கடற்படைப் படையை அனுப்பியுள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மோசமான எதுவும் நடப்பதை நான் பார்க்க விரும்பவில்லை,
ஆனால் நாங்கள் அவர்களை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்றார். இதனையடுத்து, அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தரப்பும் வார இறுதியில் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் இந்த நகர்வுகள் எதுவும் ஒரு போருக்கான நெருக்கடியாக இருக்காது என்றே நம்புகிறோம் என தெரிவித்துள்ள ஒரு ஈரனிய அதிகாரி, ஆனால் ஈரானிய இராணுவமும் எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்த முறை அமெரிக்கா தங்களை எந்த வகையில் தாக்கினாலும், இந்த விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் முடிந்தவரை கடினமான முறையில் பதிலளிப்போம் என்றார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதன் ஒருபகுதியாக எந்த நவீனக் கருவிகளும் கண்காணிக்க முடியாத நிலத்தடி பங்கருக்கு ஈரான் உயர் தலைவர் அலி காமெனியை இடம் மாற்றியுள்ளனர்.
நாட்டின் கட்டுப்பாட்டை தற்போது அலி காமெனியின் இளைய மகன் 53 வயதான மசூத் காமெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஈரான் தலைநகரில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வணிகர்களும் பொதுமக்களும் முன்னெடுத்த ஆர்ப்பாட்டமானது திடீரென்று ஆட்சியாளர்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டமாக வெடித்தது.
இதனையடுத்து கலவரக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறையைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடைல் பதற்றம் அதிகரித்தது.

அமைதியாக போராடும் மக்களை ஈரான் தொடர்ந்து கொன்றாலோ அல்லது கைது செய்யப்பட்டுள்ளவர்களை தண்டிக்கும் வகையில் பெருமளவில் தூக்கிலிட்டாலோ இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டியிருந்தார்.
சமீப நாட்களாக ஈரானில் போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களில் 800 பேர்களை ஈரான் தூக்கிலிடப் போவதாக பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டை ஈரான் நீதித்துறை புறந்தள்ளியதுடன், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் பொய்யானத் தகவல்களை பொதுவெளியில் பகிர்வது பலவகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பதிலளித்தது.
இருப்பினும், ஈரான் மீதான நடவடிக்கைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகவே ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |