டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க தலைநகரில் நடந்த கலவரம்: கண்டனம் தெரிவித்த ஜோ பைடன்
அமெரிக்காவில் ஜோ பைடனுக்கான தேர்தலுக்கு சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு கலவரமாக மாறிய போராட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னல்களை நொறுக்கி, அங்கிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை தாக்க முயன்றனர்.
கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ஈடுபட்டனர். பல ஆயிரக்கணக்கான தேசிய காவல்படையினர், எஃப்.பி.ஐ ஏஜெண்டுகள் மற்றும் அமெரிக்க இரகசிய சேவை ஆகியூர் பொலிஸாருக்கு உதவினர். அப்போது வன்முறைச் செயல்களை தடுக்க கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டது.
கலவரத்துக்கிடையில், பெண் போராட்டக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டது யார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்பாட்டக்காரர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கலவரம் குறித்து பேசிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தனது கண்டனைத்தை வெளிப்படுத்தினார். இது "டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததன் வன்முறை வெளிப்பாடு என்றும் டிரம்ப் தனது கும்பலை போராட்டத்துக்கு தூண்டிவிட்டதாகவும் கூறினார்.
மேலும், ஜனநாயகம் கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டின் வரலாற்றில் இது "ஒரு இருண்ட தருணம்" என்றார்.
"ஜனாதிபதி டிரம்ப் தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றவும், அரசியலமைப்பைக் காக்கவும், இந்த முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உடனடியாக தேசிய தொலைக்காட்சியில் பேச வேண்டும்" என கேட்டுக்கொண்ட ஜோ பைடன், "இது ஓரு முறையான எதிர்ப்பு அல்ல, இது ஒரு கிளர்ச்சி" எனக் கூறினார்.