டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல்... அமெரிக்க வேளாண் பொருட்களை வாரிக்குவிக்கும் சீன நிறுவனம்
ஆட்சிக்கு வந்ததும் சீனா மீது கடுமையாக வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டி வரும் நிலையில், சீன அரசு நிறுவனம் ஒன்று ஒரே வாரத்தில் 500,000 மெட்ரிக் டன் சோயாபீன்ஸ் இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இறக்குமதி ஒப்பந்தம்
மலிவான பிரேசிலிய சோயாபீன்ஸ் வாங்குவதற்கு பதிலாக சீனாவின் Sinograin நிறுவனம் அமெரிக்காவிடம் அதிக கட்டணம் செலுத்தி இறக்குமதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலக நாடுகளில் மிக அதிகமாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளையே சீனா பெருமளவு நம்பியிருக்கிறது.
இந்த நிலையில், ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வரவிருப்பதால், ஏற்கனவே அவர் மிரட்டல் விடுத்துள்ளது போன்று சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அவர் அதிக வரி விதிக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
இதனையடுத்தே சீனாவின் Sinograin நிறுவனம் முந்திக்கொண்டு டன் கணக்கில் சோயாபீன்ஸ் இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் சோயாபீன்ஸ் அதிகமாக தேங்கியுள்ளதாலும், பிரேசில் நாட்டில் வரலாறு காணாத அறுவடை வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாலும், இந்த வாரம் சந்தையில் சோயாபீன்ஸ் விலையானது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவடைந்து காணப்பட்டது.
750,000 மெட்ரிக் டன்
ஆனால் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட Sinograin நிறுவனம் இதுவரை 750,000 மெட்ரிக் டன் சோயாபீன்ஸ் இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இறக்குமதி செய்யப்படும்.
பொதுவாக சோயாபீன்ஸ் பற்றாக்குறை ஏற்படும் போது Sinograin நிறுவனம் அமெரிக்காவையே நாடியுள்ளது. பிரேசில் நாட்டின் சோயாபீன்ஸை ஒப்பிடுகையில் கெட்டுப்போகும் வாய்ப்பு குறைவு என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |