ட்ரம்பின் கடும் வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடா விரையும் ரூபியோ
கனடா மீது தொடர்ந்து வரி விதிப்புகளை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்து வரும் நிலையில், கடும் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ கனடாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்.
முதன்மையான அண்டை நாடாக
கனடாவின் கியூபெக்கில் நடக்கும் ஏழுவர் குழு வெளிவிவகார அமைச்சர்களின் பேச்சுவார்த்தைகளில் ரூபியோ கலந்து கொள்கிறார்.
சவுதி அரேபியாவில் உக்ரைன் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்ததன் பின்னர், சவுதி துறைமுக நகரமான ஜெட்டாவிலிருந்து புதன்கிழமை அதிகாலை புறப்பட்டு கனடாவில் தரையிறங்குவார் என்றே கூறப்படுகிறது.
பெரும்பாலான அமெரிக்க நிர்வாகங்களில், ஜனாதிபதிகளும் மூத்த அதிகாரிகளும் கனடாவை தங்களின் முதன்மையான அண்டை நாடாக அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வந்ததன் பின்னரே, கனடாவை வம்பிழுப்பதும், அமெரிக்காவின் 51வது மாகாணம் என கேலி செய்வதும், கனடா பிரதமரை ஆளுநர் என கிண்டல் செய்வதுமாக இருந்து வருகிறார்.
அத்துடன் உலக அளவில் பிரபலமடையாத நாடு என்றும் குறிப்பிட்டு வருகிறார். ரூபியோ கனடாவுக்கு வந்து சேரும் அதே நாளில் தான் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி தொடர்பிலான ட்ரம்பின் 25 சதவிகித வரி விதிப்பு அமுலுக்கு வருகிறது.
வர்த்தக பதட்டங்கள் குறித்து
செவ்வாயன்று கனடா மீதான வரி விகிதத்தை இரட்டிப்பாக்குவதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார், ஆனால் ஒன்ராறியோ மூன்று அமெரிக்க மாகாணங்களுக்கு மின்சாரம் மீதான கூடுதல் வரியை கைவிட ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து பின்வாங்கினார்.
இதனிடையே, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியைச் சந்திக்கும் போது வர்த்தக பதட்டங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக ரூபியோ ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், நாம் இணைந்து முடிக்க வேண்டிய விடயங்கள், தற்போது நாம் உடன்படாத விடயங்களால் எதிர்மறையாகப் பாதிக்கப்படாமல் இருக்க, முடிந்தவரை முயற்சிப்பது நமது கடமையாகும் என்றும் ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு வரவிருக்கும் மார்க் கார்னி தெரிவிக்கையில், அமெரிக்கர்கள் எங்கள் வளங்கள், எங்கள் நீர், எங்கள் நிலம், எங்கள் நாட்டையே அபகரிக்க விரும்புகிறார்கள் என ஆவேசப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |