ட்ரம்பின் வரி விதிப்பால்... அன்றாடப் பொருட்களின் விலை அதிகமாகும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்புகளால் எந்தெந்த பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் நுகர்வோர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் 10 சதவிகிதம் வரி
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் பொறுப்பேற்கவிருக்கிறார். இந்த நிலையில், பொறுப்புக்கு வரும் முதல் நாளிலேயே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி சீனாவின் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரிகள் மீது மேலும் 10 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இரண்டு பெரிய வர்த்தக பங்காளிகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் இருந்தும் 1.3 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.
அதாவது இனிமேல் கார்கள், எரிவாயு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் உபகரணங்கள் முதல் மருந்துகள் மற்றும் ஆடைகள் வரையிலான பொருட்கள் விலை உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மெக்ஸிகோ அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், கடந்த ஆண்டு மட்டும் 475 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த இறக்குமதிகளில் பெரும்பாலானவை கார்கள், கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களாகும்.
கட்டணம் உயரலாம்
இனி புதிய வரி விதிப்பால் கட்டணம் உயரும். கடந்த ஆண்டு மட்டும் கனடாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயந்திரங்கள் உட்பட 418 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா தனது வடக்கு அண்டை நாடுகளில் இருந்து பில்லியன் கணக்கான பிளாஸ்டிக், மருந்துகள், உலோகங்கள் மற்றும் விவசாய பொருட்களை இறக்குமதி செய்கிறது.
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் பல கார்கள் மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளில் அசெம்பிள் செய்யப்படுகின்றன அல்லது அவற்றிலிருந்து பெறப்பட்ட பாகங்களைப் பயன்படுத்துகின்றன.
இனிமேல் ஒரு புதிய காரின் விலைக்கு 1,000 முதல் 5,000 டொலர் வரை கட்டணம் உயரலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு விவசாயப் பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
புதிய வரி விதிப்பு காரணமாக பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் பால் போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 427 பில்லியன் டொலர் பொருட்களை இறக்குமதி செய்ததுடன் கிட்டத்தட்ட 148 பில்லியன் டொலர் பொருட்களை ஏற்றுமதியும் செய்தது.
தமது வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு விளக்கமளித்த டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் மற்றும் குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க இது உதவும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |