ட்ரம்பின் அதிரடி வரி விதிப்பு... கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்
அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் ட்ரம்ப் நிர்வாகம் குறைந்தபட்சம் 10 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், சில நாடுகள் இந்த வரி விதிப்பால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 5ம் திகதி முதல்
பொருளாதார சுதந்திரப் பிரகடனம் என குறிப்பிட்டு, அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகள் மீதும் ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்துள்ளது. புதிய வரி விதிப்பால் இனி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீத வரி உறுதியாகியுள்ளது.
ஏப்ரல் 5ம் திகதி முதல் இந்த வரி விதிப்பு அமுலுக்கு வருகிறது. இதில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 20 சதவீத வரியும் சீனா மீது புதிதாக 34 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீனா மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால், சீனா மீதான வரி விதிப்பு 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா மீது 26 சதவீதமும் தென் கொரியா மீது 25 சதவீதமும் ஜப்பான் மீது 24 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ட்ரம்பின் புதிய வரி விதிப்பில் இருந்து தற்போது கனடாவும் மெக்சிகோவும் தப்பியுள்ளது. ஏற்கனவே இந்த இரு நாடுகள் மீதும் 25 சதவீத வரி விதிப்பை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வரி விதிக்கப்படவில்லை
மேலும், கியூபா, பெலாரஸ், வட கொரியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ட்ரம்பின் 10 சதவீத அடிப்படை வரி விதிப்பில் இருந்து தப்பியுள்ளது. இந்த நாடுகள் மீது பல்வேறு பொருளாதரா தடைகள் அமுலில் இருப்பதால், இவர்கள் மீது வரி விதிக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை வாகன ஏற்றுமதி தொடர்பில் 25 சதவீத வரியை ட்ரம்ப் விதித்திருந்தார். மட்டுமின்றி, எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளையும் ட்ரம்ப் விதித்தார்.
இது தற்போது கேன்களில் விற்கப்படும் பீர் மற்றும் அலுமினிய கேன்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தாமிரம் மற்றும் மரக்கட்டை இறக்குமதி குறித்தும் விசாரணை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார், இது மேலும் வரிகளுக்கு வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |