டிரம்ப் வரி அறிவிப்பு: 12 நாடுகளுக்கு கடும் வரி, ஆகஸ்ட் 1 முதல் அமுல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 12 நாடுகளுக்கான புதிய வரி விதிப்பு கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நாடுகளின் பெயர்கள் திங்கள்கிழமை வெளியிடப்படும் என்றும், ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு 70% வரை வரி அதிகரிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த புதிய வரி விகிதங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூ ஜெர்சி செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் அணுகுமுறை "ஏற்றுக்கொள் அல்லது கைவிடு" என்றே இருக்கும் என்றார்.
கடந்த ஜனவரியில் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பல நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தியிருந்தார்.
இதற்கு உலக நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், 90 நாட்களுக்கு தற்காலிகமாக 10% அடிப்படை வரியை நிர்ணயித்து உத்தரவிட்டார்.
இந்த காலக்கெடு ஜூலை 9-ம் திகதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதுவரை பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தை மட்டுமே முடிவடைந்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி உயர்வு மட்டுமே விதிக்கப்படும் என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஜூலை 9 காலக்கெடு நெருங்குவதால், பல நாடுகள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
டிரம்பின் இந்த சமீபத்திய அறிவிப்பு, ஒப்பந்தம் செய்யாத நாடுகள் மீது கடுமையான வரிச் சுமைகள் விதிக்கப்படும் என்ற அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |