பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் - இந்தியாவை சீண்டிய டிரம்ப்
பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவிற்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு 25% வரி
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
இந்தியா உலகில் அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. மேலும் ரஷ்யாவிடமிருந்து அதிகளவிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் எரிசக்திகளை இறக்குமதி செய்கிறது. இதுவே வரி விதிப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானில் இருந்து கச்சா எண்ணை, பெட்ரோலியப் பொருள்களை வாங்கி விற்பனை செய்ததாக 6 தனியார் இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவித்துள்ளது.
தற்போது, மீண்டும் இந்தியாவை சீண்டும் வகையில், பதிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய்
பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தானுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்கள் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படும்.
இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருக்கிறோம். பாகிஸ்தான் எப்போதாவது இந்தியாவிற்கு எண்ணெயை விற்பனை செய்யலாம்" என தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தானுடன் அனைத்து வித ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளையும் துண்டித்துள்ள நிலையில், பாகிஸ்தானிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கலாம் என கூறி கிண்டல் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |