நான் பதவியேற்கும் முன் பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்... ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க இறுதிக் கெடு விதித்துள்ளார்.
ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், ஹமாஸ் அமைப்பு தான் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
மனிதத்தன்மையே இல்லாமல், முரட்டுத்தனமாக, மொத்த உலகின் விருப்பத்துக்கும் எதிராக மத்திய கிழக்கு பகுதியில் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளைக் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால், எல்லாம் வெறும் பேச்சு மட்டும்தான், யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதுபோல தெரியவில்லை என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
ஆக, தான் தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் முன், ஹமாஸ் அமைப்பு தான் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவேண்டும் என இறுதிக் கெடு விதித்துள்ளார் அவர்.
2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 20ஆம் திகதி, அதாவது, நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் நாளுக்கு முன் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.
அக்டோபர் 7 தாக்குதலின்போது, ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நான்கு அமெரிக்கர்கள் காசாவில் உயிருடன் இருப்பதாகவும், மூன்று பேருடைய உடல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
அமெரிக்க இஸ்ரேல் குடியுரிமை கொண்டவரான Omer Neutra (21) என்பவர் ஹமாஸ் பிடியிலிருந்த நிலையில், அவர் விடுவிக்கப்படுவதற்காக அவரது பெற்றோர் போராடிக்கொண்டிருக்க, அவர் ஓராண்டுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டது தெரியவந்துள்ளதாக சமீபத்தில் இஸ்ரேல் அரசு தெரிவித்தது.
அதைத் தொடர்ந்தே ட்ரம்பின் எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |