படைகளை குறைக்கப்போவதாக ஜேர்மனியை மிரட்டும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்புக்கும் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்குமிடையிலான மோதல் முற்றுவதுபோல் தோன்றுகிறது.
தற்போது, ஜேர்மனியில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாக மிரட்டியுள்ளார் ட்ரம்ப்!
முற்றும் வார்த்தை மோதல்
சமீபத்தில், ஈரானின் தலைமையால் அமெரிக்கா அவமானப்படுத்தப்படுகிறது என்று கூறியிருந்தார் ஜேர்மன் சேன்ஸலரான ஃபிரெட்ரிக் மெர்ஸ்.

ஈரான் போர் தொடர்பில் அமெரிக்கா மீது விமர்சனம் ஒன்றை முன்வைத்த மெர்ஸ், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தவறான முடிவு என்றும், போரைத் துவக்குவது மட்டுமல்ல, அதை முடிக்கவும் தெரியவேண்டும் என்னும் ரீதியில் கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஈரானியர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகவும் திறமையானவர்கள், அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால், பேச்சுவார்த்தை நடத்தாமல் இருப்பதில் மிகவும் திறமையானவர்கள்.
அதாவது, அமெரிக்கர்களை இஸ்லாமாபாத்திற்குப் பயணிக்க வைத்து, எந்தவொரு பலனும் இல்லாமல் மீண்டும் அவர்களை அனுப்பிவிடுகிறார்கள் என்றும் கூறியிருந்தார் மெர்ஸ்.
மெர்ஸின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இடுகை ஒன்றை வெளியிட்ட ட்ரம்ப், ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை என்று ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் நினைக்கிறார் போலும்.
அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. ஈரானிடம் மட்டும் ஒரு அணு ஆயுதம் இருக்குமானால், மொத்த உலகமும் அதனிடம் பிணைக்கைதியாக இருக்கும்.
மற்ற நாட்டு தலைவர்கள் எப்போதோ செய்திருக்கவேண்டிய ஒரு விடயத்தை நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன், ஜேர்மனி பொருளாதாரம் முதலான விடயங்களில் இவ்வளவு மோசமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை என கோபத்துடன் பதிலளித்திருந்தார் ட்ரம்ப்.
படைகளை குறைக்கப்போவதாக மிரட்டல்
இப்படிப்பட்ட சூழலில்தான், தற்போது, ஜேர்மனியில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாக மிரட்டியுள்ளார் ட்ரம்ப்.

படைகளைக் குறைப்பதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2025 டிசம்பர் நிலவரப்படி, 36,000க்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் ஜேர்மனியில் முகாமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் தொடர்பான தரவு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |