சீனா விவகாரம்... கனடாவிற்கு கடும் மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அழித்துவிடும் என எச்சரிக்கை
அமெரிக்காவை தவிர்த்து சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் கனடாவிற்கு 100 சதவீத வரி விதிப்பு உறுதி என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடும் எச்சரிக்கை
சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டால் அந்த நாடு கனடாவை மொத்தமாக முழுங்கிவிடும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கனடாவை எச்சரித்துள்ளார்.

சனிக்கிழமை தனது Truth சமூக ஊடகத்தில் பதிவிட்ட ட்ரம்ப், கனடாவிற்கு பிரதமர் மார்க் கார்னிக்கும் கடும் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவிற்கு வரும் சீன இறக்குமதிகளுக்கு கனடாவை ஒரு இறக்குமதி மையத் துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டங்களை பிரதமர் மார்க் கார்னி வகுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா கனடாவை மொத்தமாக முழுங்கிவிடும், அதன் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை உட்பட அனைத்தையும் முழுமையாக அழித்துவிடும் என பதிவிட்டுள்ளார்.
கனடா சீனாவுடன் உறுதியாக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்றால், அமெரிக்காவிற்கு வரும் அனைத்து கனடியப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கும் எதிராக உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.
முன்னதாக டாவோஸில் உரையாற்றிய பிரதமர் கார்னி, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தலைமையிலான, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறை மங்கி வருவதாக எச்சரித்தார்.

நிர்ப்பந்தத்தைக் கண்டித்தார்
இதுவே, ட்ரம்பை கொந்தளிக்க வைத்ததுடன், மிரட்டல் விடுக்கவும் காரணமாக அமைந்தது. நாம் வல்லரசுப் போட்டி நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பது ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.
விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கு மங்கி வருகிறது. பலமானவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்யலாம், பலவீனமானவர்கள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆக வேண்டிய நிலை என்று கனடா பிரதமர் கார்னி அந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தனது 15 நிமிட உரையின் போது, பெரிய வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் நிர்ப்பந்தத்தைக் கண்டித்தார். ஆனால், ட்ரம்ப்பின் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.
கடந்த வாரம் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் கார்னி, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கத்துடன் ஒரு புதிய மூலோபாய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இதுவும் ட்ரம்பின் மிரட்டலுக்கு முதன்மை காரணம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |