வெனிசுலாவை அடுத்து... இன்னொரு தென் அமெரிக்க நாட்டிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
வெனிசுலாவிற்குள் புகுந்து அந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், தற்போது இன்னொரு தென் அமெரிக்க நாடு மீது குறி வைத்துள்ளது.
இராணுவ நடவடிக்கை
கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதியான குஸ்டாவோ பெட்ரோவைப் பற்றி கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், ஒரு மோசமான நபரால் அந்த நாடு ஆளப்படுகிறது என்றார்.

மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு என கொக்கெய்ன் தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் பெட்ரோ மீது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு அவரால் இதை முன்னெடுக்க முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதன் அர்த்தம் கொலம்பியாவில் அமெரிக்காவின் ஒரு இராணுவ நடவடிக்கை இருக்கும் என்பதுதானா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, அது உண்மையில் நல்ல கருத்து என்றார்.
கரீபியன் பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் குவிப்புக்கு மத்தியில், அமெரிக்காவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையே பல மாதங்களாக பதட்டங்கள் நிலவி வருகின்றன.
மேலும், ட்ரம்ப்பின் கடுமையான சர்வதேச விமர்சகர்களில் ஒருவராகவும் ஜனாதிபதி பெட்ரோ இருந்து வருகிறார். இந்த நிலையில், தனது அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் கொக்கெய்னைக் கைப்பற்றி வருவதாகவும், ட்ரம்ப் தங்கள் நாட்டிற்கு வந்து அதை நேரிடையாகத் தெரிந்துகொள்ளலாம் என்றும் கடந்த மாதம் கொலம்பியத் தலைவர் அழைப்பு விடுத்தார்.

உலகிலேயே கொக்கெய்ன் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு கொலம்பியா என்பதுடன், அமெரிக்காவில் புழங்கும் 90 சதவீத கொக்கெய்ன் கொலம்பியாவில் தயாரிக்கப்படுவது என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
பெட்ரோவிற்கு கடும் மிரட்டல்
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் என்று பெட்ரோ குறிப்பிட்டுள்ளார். இது மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், சனிக்கிழமை வெனிசுலா மீதான இராணுவ நடவடிக்கையை அடுத்து, பெட்ரோவிற்கு கடும் மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடுத்த இலக்கு கொலம்பியாவின் பெட்ரோ என்றார்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் பாதுகாப்புப் படை பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை, கொலம்பியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பெட்ரோ சான்செஸ், ஒரு பாதுகாப்பு அவசரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கொலம்பிய ராணுவம் நமது இறையாண்மையை மட்டுமல்லாமல், வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்றார்.
மட்டுமின்றி, ட்ரம்ப் நிர்வாகத்தால் மனிதாபிமான அவசரநிலை ஏற்பட்டால், அதற்கான மாற்றுத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக சான்செஸ் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |