நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன்
Trump to launch nuclear strike against Tehran: தெஹ்ரான் மீது ட்ரம்ப் அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்க உள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகரான டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
கடுமையான அழுத்தம்
அமெரிக்க கன்சர்வேட்டிவ் அரசியல் விமர்சகரான டக்கர் கார்ல்சன், சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். மத்திய ஈரானில் உள்ள பிக்காக்ஸ் மலையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இலக்காக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்காக்ஸ் மலையில் ஈரான் அரசாங்கம் தனது அணு செறிவூட்டல் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை கூறுகிறது என குறிப்பிட்டுள்ள கார்ல்சன், செறிவூட்டல் நடைபெறுவதாகக் கூறப்படும் சுரங்கங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள எந்தவொரு வழக்கமான ஆயுதத்தாலும் 300 அடி திடமான கிரானைட் பாறையை ஊடுருவிச் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், அணு ஆயுதத் தாக்குதல்தான் ஒரே இராணுவ வழி. மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு ஈரானை அழிப்பது மட்டுமே ஒரே வழி என்பதைப் புரிந்து வைத்திருக்கும் நெதன்யாகு, ஈரான் மீதான அணு ஆயுதத் தாக்குதலுக்காகக் கடுமையாக வலியுறுத்தி வருகிறார்.
ஒவ்வொருமுறை தொலைபேசியில் ட்ரம்பிடம் தொடர்புகொள்ளும் போதும், நெதன்யாகு இதை வலியுறுத்தி வருவதாகவும், நெதன்யாகுவின் அழுத்தம் காரணமாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதா இல்லையா என்பது குறித்து ட்ரம்ப் அடுத்த வார இறுதிக்குள் முடிவெடுப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது என்கிறார் கார்ல்சன்.
மேலும், நெதன்யாகுவின் பேச்சைக் கேட்டு முடிவெடுக்க அமெரிக்க ஜனாதிபதி தயங்கி வருவதோடு, ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என வாதிட்டு வரும் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரின் வாதங்களையும் கேட்டு வருகிறார்.
கார்ல்சனின் இந்த எச்சரிக்கை, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாக ட்ரம்ப் சமீபத்திய நாட்களில் மீண்டும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ள சூழலில் வெளியாகியுள்ளது.
ஞாயிறன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதாக அச்சுறுத்தியதுடன், எதிர்பாராத ஒரு நேரத்தில் அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கலாம் என்றும் கூறினார்.
கடும் விரக்தியில்
மேலும், ஈரானை நான் மொத்தமாக முடிக்காததற்கு ஒரே காரணம், நான் கனிவாக இருக்க விரும்புகிறேன் என்பதுதான். என்னால் முடிந்தவரை அங்குள்ள அப்பாவி மக்களையெல்லாம் காப்பாற்ற முயல்கிறேன்... ஆனால், ஒரு கட்டத்தில் நாம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

கார்ல்சனின் கூற்றுப்படி, கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இஸ்ரேல் நிர்வாகத்திலிருந்து அழுத்தம் வருகிறது என்றார்.
மட்டுமின்றி, நெதன்யாகு தற்போது அரசியல் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதுடன், கடும் விரக்தியிலும் இருக்கிறார் என்பதே அங்கிருந்து கசியும் தகவல் என்கிறார் கார்ல்சன்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக இஸ்ரேலின் அரசியலில் தலையிட்டு, நெதன்யாகுவின் கூட்டணியை 61 ஆசனங்களுக்கு கொண்டு வர மற்ற கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத வரை நெதன்யாகுவால் அங்கு நிம்மதியாக இருக்க முடியாது என்கிறார் கார்ல்சன்.

நெதன்யாகு மீண்டும் அதிகாரத்திற்கு வராத பட்சத்தில், அவர் பிரதமர் பதவியை இழப்பதுடன், அவப்பெயர், விசாரணைகள் மற்றும் ஒருவேளை சிறைவாசம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார். எனவே, நெதன்யாகு ட்ரம்ப்புடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். அவருக்கு இந்த போர் தேவைப்படுகிறது என்கிறார் கார்ல்சன்.
இஸ்ரேலியப் பிரதமர், ட்ரம்ப் நிர்வாகத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான சிலரிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக கார்ல்சன் கூறுகிறார். இவர்களில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் சென்ட்காம் (CENTCOM) தளபதி பிராட் கூப்பர் ஆகியோரும் அடங்குவர்;
அமீரகத் தலைவர்கள்
இவர்கள் இருவரும் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதை எதிர்ப்பதுடன், மீண்டும் தீவிரமான போர் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு வலியுறுத்தி வருகின்றனர்.
அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிஐஏ (CIA) இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர், ஜனநாயகக் கட்சியின் சில தலைவர்களுடன் இணைந்து, நெதன்யாகுவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீதான இறுதித் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவைக் கோருவதற்காக நெதன்யாகு செப்டம்பர் 27 அன்று இரகசியமாக அபுதாபிக்குச் சென்ற நிலையில், அமீரகத் தலைவர்கள் அந்த வேண்டுகோளை நிராகரித்தனர் என்றும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவால் ஏற்படப்போகும் ஒரு அணுத் தாக்குதல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்றும், பிக்காக்ஸ் மலையில் தரைமட்ட வெடிப்பினால் ஏற்படும் கதிரியக்க வீழ்ச்சி பாரசீக வளைகுடாவை மாசுபடுத்தி, 10 கோடி மக்களுக்கு சேவை செய்யும் நீர் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் கார்ல்சன் எச்சரித்துள்ளார்.