சுயநலவாதி, மிகவும் ஆபத்தானவர்... அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முன்னாள் அதிகாரிகள் அச்சம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ஆட்சியின் போது அவரது நம்பிக்கையைப் பெற்ற பல அதிகாரிகள் தற்போது அவர் நாட்டை ஆளத் தகுதியற்றவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வாய்ப்பளிக்க வேண்டாம்
டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க மக்கள் இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் மிகவும் ஆபத்தானவர், மிகவும் சுயநலவாதி, மிகவும் தீவிர போக்கு கொண்டவர் என அவரது முன்னாள் அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையில் தேர்தல் களத்தில் உள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
ஆனால் தமது முன்னாள் அதிகாரிகள் பலரிடம் இருந்தும் ஆதரவைத் திரட்ட முடியாமல் போராடி வருகிறார். அதில் ஒருவர் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ். தற்போதைய சூழலில், டொனால்டு ட்ரம்பை ஜனாதிபதியாக ஆதரிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றே மைக் பென்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மிகவும் ஆபத்தானவர்
ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் டொனால்டு ட்ரம்ப் என காட்டமாக பதிலளித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர். நாட்டை மீண்டும் ஆளத் தகுதியானவர் டொனால்டு ட்ரம்ப் என அவரது முன்னாள் அதிகாரிகளே ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் பணியாற்றியுள்ள மூத்த அதிகாரிகள் பலர், டொனால்டு ட்ரம்ப் மிகவும் ஆபத்தானவர் என்ற கருத்தையை முன்வைப்பதாக பைடன் பரப்புரை செய்தித் தொடர்பாளர் அம்மார் மௌசா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கணிப்புகளில் டொனால்டு ட்ரம்ப் முந்தினாலும், அவரது முன்னாள் அதிகாரிகள் தரப்பின் ஆதரவை அவரால் பெற முடியவில்லை என்றால், அது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்கிறார் அம்மார் மெளசா.
டொனால்டு ட்ரம்பின் கட்சியினர் சிலரே, பைடனுக்கு வாக்களிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |