ஹமாஸ் விரைவாக முடிவை சொல்ல வேண்டும்! தாமதித்தால் சலுகை ரத்து செய்யப்படும்: டிரம்ப் எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விரைவாக முடிவை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம்
காசாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு இருந்தார்.
இந்த ஒப்பந்தத்தில் உடனடி போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு, ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு காலக்கெடுவை நிர்ணயித்ததோடு, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கையை டிரம்ப் விடுத்து இருந்தார்.
இதையடுத்து டிரம்பின் இந்த ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஹமாஸ் நேற்று அறிவித்து இருந்தது.
டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
இந்நிலையில் பிணைக் கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தையை உடனடியாக உறுதி செய்யுமாறு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இதில் கால தாமதங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் நீடித்தால் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், இதை விரைவாக முடிப்போம், நியாயமாக அனைவரும் நடத்தப்படுவோம் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |