முடிவு எடுத்துவிட்டேன்... தென் அமெரிக்க நாடு மீது போருக்குத் தயாரான ட்ரம்ப்
பல உயர் மட்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அபாயங்கள் மற்றும் நன்மை
வெனிசுலா மீது இந்த வாரத்தில் இரணுவ நடவடிக்கை உறுதி என ட்ரம்ப் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி நீக்கம் செய்வதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளையும் ட்ரம்ப் ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் Southern Spear என குறிப்பிடப்பட்டுள்ள இந்த வடவடிக்கைக்கு என ஒரு டசினுக்கும் அதிகமானப் போர்க் கப்பல்கள் மற்றும் 15,000 வீரர்கள் கரீபியன் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் குறைப்பதற்கான தனது முயற்சிகளில் முக்கிய முடிவெடுத்துள்ளதாக ட்ரம்ப் வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளார்.
வெனிசுலா தொடர்பில் இறுதி முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அது என்ன என்பதை தற்போது வெளியிட முடியாது என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் உள்ளிட்ட ஒரு சிறிய குழு புதன்கிழமை வெனிசுலா தொடர்பில் ட்ரம்புடன் ஆலோசனை நடத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பிற உயர் அதிகாரிகள் உட்பட ஒரு பெரிய தேசிய பாதுகாப்பு குழு, வியாழக்கிழமை சூழ்நிலை அறையில் ட்ரம்பை சந்தித்தது.
இந்த இரு அமர்வுகளின் போதும் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் வெனிசுலாவில் தாக்குதல் இலக்கு குறித்து மதிப்பாய்வு செய்துள்ளனர். வெனிசுலா தொடர்பில் பல்வேறு வாய்ப்புகளை ட்ரம்பிடம் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரடி முயற்சி
இராணுவம் அல்லது அரசாங்க வசதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பாதைகள் மீதான வான்வழித் தாக்குதல்கள் அல்லது மதுரோவை வெளியேற்றுவதற்கான நேரடி முயற்சி ஆகியவை அதில் அடங்கும்.
இருப்பினும், இந்த முடிவுகள் அனைத்தையும் கைவிடவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். வெனிசுலாவில் செயல்பட CIA-வுக்கு அனுமதி அளித்ததாக கடந்த மாதம் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் நிர்வாக அதிகாரிகள் தரப்பு கடந்த வாரம் நாடளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கையில், வெனிசுலாவிற்குள் தாக்குதல் நடத்த சட்டப்பூர்வ நியாயத்தை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்று கூறினர். இருப்பினும் அப்படியான ஒரு விதியை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்திய வாரங்களில், போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் குறைந்தது 20 தாக்குதல்களை நடத்திய நிலையில், அமெரிக்கா கரீபியனில் தனது கடற்படைப் படைகளைக் குவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, இந்த வார தொடக்கத்தில் இந்தப் பிராந்தியத்தை வந்தடைந்தது. சுமார் 15,000 வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.
இவர்களுடன் ஒரு டசினுக்கும் அதிகமான போர்க்கப்பல்களும் தயார் நிலையில் உள்ளன. கரீபியன் மீது அதிகரித்த கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக அமெரிக்க இராணுவத்திற்கான மையமாக மாறியுள்ள புவேர்ட்டோ ரிக்கோவிற்கு 10 F-35 போர் விமானங்களையும் ட்ரம்ப் நிர்வாகம் அனுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |