கத்தார் மீது தாக்குதல் இனி கூடாது! இஸ்ரேல் பிரதமருக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸ் தலைவர்களை குறித்து கத்தார் மீது இஸ்ரேல் சமீபத்தில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 5 ஹமாஸ் தலைவர்கள் உட்பட கத்தார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய மத்தியஸ்தராகவும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும் இருக்கும் கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் உலக அளவில் கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்து இருப்பதாக Axios வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
டிரம்ப் எச்சரிக்கை
வெளியான தகவலின் அடிப்படையில், நெதன்யாகுவிடம் இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இனி இது போன்ற தாக்குதலை பார்த்துக் கொண்டு பொறுத்து கொள்ள மாட்டேன் என்றும் டிரம்ப் எச்சரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் இத்தகைய தாக்குதலை மீண்டும் நடத்த வேண்டாம் என நெதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என்றும், தாக்குதல் தொடங்கிய பிறகே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |