சீனா விவகாரம்... கனடாவை அடுத்து பிரித்தானியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
சீனாவுடனான உறவுகளை மீட்டெடுப்பதன் பொருளாதார நன்மைகளை பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாராட்டிய நிலையில், சீனாவுடன் வணிகத்தில் ஈடுபடுவதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவை எச்சரித்துள்ளார்.
மிகவும் ஆபத்தாக முடியும்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் செயற்பாடுகளின் கணிக்க முடியாத தன்மையால் மேற்கத்தியத் தலைவர்கள் திகைத்துக்கொண்டிருக்கும் நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியை அடுத்து பிரித்தானியாவின் ஸ்டார்மர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வியாழக்கிழமை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் மூன்று மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல், குறைந்த வரிகள் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுடன் கூடிய மேலும் ஒரு நுட்பமான உறவை ஸ்டார்மர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சீனாவுடன் அதிக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள பிரித்தானியா உறுதியளித்தது குறித்து ட்ரம்பிடம் கேட்கப்பட்டபோது, அவர் செய்தியாளர்களிடம், அவர்கள் அப்படிச் செய்வது அவர்களுக்கு மிகவும் ஆபத்தாக முடியும் என்று கூறினார்.
அதேவேளை, சீன தலைநகரில் உரையாற்றிய ஸ்டார்மர், நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துரையாடினோம், உண்மையில் சில உண்மையான முன்னேற்றங்களையும் அடைந்தோம் என்றார்.
விசா இல்லாத பயணம் மற்றும் விஸ்கி மீதான வரிகளைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தங்களை ஸ்டார்மர் பாராட்டி, இவை உண்மையிலேயே முக்கியமான அணுகுமுறை என்று கூறினார்.
ஸ்டார்மர் அரசாங்கம் வாக்குறுதியளித்த பொருளாதார வளர்ச்சியை வழங்குவதில் சிரமப்பட்டு வருகிறது, மேலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துடன் உறவுகளை மேம்படுத்துவதை ஒரு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது.

வரிகளை விதிப்பதாக
மேலும், வர்த்தக வரிகள் குறித்த ட்ரம்ப்பின் மாறிமாறி வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான வாக்குறுதிகள் ஆகியவற்றிற்கு மத்தியில் ஸ்டார்மரின் சீன வருகை அமைந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் பிரித்தானியா போன்ற அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. மேலும், அமெரிக்கா அல்லது சீனா ஆகியவற்றுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுவதில் பிரித்தானியா தெரிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும்,
செப்டம்பர் மாதம் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, பிரித்தானியாவில் 150 பில்லியன் பவுண்டு அமெரிக்க முதலீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்ததையும் ஸ்டார்மர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில், கனடாவின் தலைவர் மார்க் கார்னி சமீபத்தில் சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது சீனாவுடன் செய்துகொண்ட பொருளாதார ஒப்பந்தங்களை கனடா செயல்படுத்தினால், அந்நாட்டின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார்.
இதனிடையே, ஜேர்மனியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் சீனாவுக்குப் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி ட்ரம்பும் சீனா செல்வதாகக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |