உக்ரைன் ஜனாதிபதிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்: ஐரோப்பிய நாடுகள் மெளனம்
அமெரிக்கா ஆதரிக்கும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டொனால்டு ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிகப்பெரிய வாய்ப்பு
சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ட்ரம்பின் சிறப்பு குழுவும் ரஷ்ய அதிகாரிகள் தரப்பும் 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதில் நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து ஒருபோதும் உக்ரைனுக்கு வழங்கப்படாது என்றும், ரஷ்யா இதுவரை ஆக்கிரமித்துள்ள நிலங்களை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்றும், உக்ரைன் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்க வேண்டும்,
அமெரிக்கா சார்பில் உக்ரைனில் கட்டுமான வேலைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கான செலவுகளை உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் போர் முடிவுக்கு வர மிகப்பெரிய வாய்ப்பு அமைந்துள்ளதாகவும், சமாதான ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யா மற்றும் ட்ரம்பால் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஒப்பந்தம் தங்கள் நாட்டை சரணடைய வைப்பதற்கான சூழ்ச்சி என்றே உக்ரைன் அதிகாரிகள் கொந்தளித்துள்ளனர்.
நவம்பர் 27 ஆம் திகதிக்குள் ஜெலென்ஸ்கி அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில்,
ஜெலென்ஸ்கியும் ஐரோப்பாவும் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.. ரஷ்யர்களிடம் உக்ரைனை ஒப்படைப்பதற்கு ஒப்பான செயல் இதுவென்றே சில ஐரோப்பிய தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே ட்ரம்பின் துணை ஜனாதிபதி வான்ஸ் உடனான தொலைபேசி உரையாடலை அடுத்து, ஜெலெஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொலைபேசியில் விவாதித்துள்ளார்.
அடுத்த வியாழக்கிழமைக்குள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் விலைமதிப்பற்ற ஆயுத விநியோகத்தை முடக்கும் நிலை வரும் என்று அமெரிக்கா உக்ரைனை எச்சரித்துள்ளது.
ஆபத்தான சூழல்
கசிந்த தகவல்களின் அடிப்படையில், முந்தைய எந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போதும் இல்லாத அளவுக்கு, அமெரிக்காவிடமிருந்து உக்ரைன் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கான காணொளி செய்தியில், 28 அம்ச சமாதான ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் உக்ரைன் அமெரிக்காவின் ஆதரவை இழக்கும் அபாயம் இருப்பதாக ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ஆனால் எதிரிகள் வசம் நாட்டை ஒப்படைக்க தாம் தயாரல்ல என்றும் மாற்றுவழிகளை தாம் முன்மொழிய இருப்பதாகவும் நாட்டு மக்களுக்கு அவர் உறுதி அளித்துள்ளார்.
நாம் உக்ரைனுக்கு எப்போதும் துரோகம் இழைக்கவில்லை, தற்போதும் அவ்வாறு செய்ய மாட்டோம் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். நம்மை இரண்டு முறை தாக்கியவர்களை நாம் நம்ப வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜெலென்ஸ்கி,
மிகவும் கடினமான மற்றும் மிகவும் ஆபத்தான சூழல் என்னவென்றால் சுதந்திரம் இல்லாமல், கண்ணியம் இல்லாமல், நீதி இல்லாத வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்பதே என்றார்.
அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த சமாதான ஒப்பந்தம் தொடர்பில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இதுவரை வெளிப்படையான கருத்தேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |