ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு
ஈரானுடனான போர் நிறுத்தம் காலாவதியாகும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததோடு, இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
மீண்டும் குண்டு வீச்சு
வெள்ளிக்கிழமையன்று பேசிய அமெரிக்காவின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி ட்ரம்ப், அடுத்த வாரம் காலாவதியாகவுள்ள போர்நிறுத்தம் குறித்த முடிவு இன்னும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவில்லை என்றால், மீண்டும் குண்டு வீச்சு தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.
ஆனால், CBS செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், ஈரான் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டதுடன், தங்களின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவும் தயார் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால், இது உண்மைக்கு புறம்பானது என ஈரான் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஜனாதிபதி ட்ரம்ப்,
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படவிருப்பதால், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மிகவும் மகிழ்ச்சியடைவார். சீனாவில் எங்கள் இருவரின் சந்திப்பு சிறப்பான ஒன்றாகவும், சாத்தியமானதாகவும் வலராறு படைப்பதாகவும் இருக்கும் என்றார்.
ஆனால், வியாழக்கிழமை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியைத் தொடர்புகொண்ட சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, ஹார்முஸ் நீரிணை வழியாக இயல்பான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள், சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கோரிக்கையாகும் என்றார்.

சீனாவின் எண்ணெய் தேவையில் சுமார் 20 சதவீதம் ஈரானிலிருந்து பெறப்படுகிறது; மேலும், அதன் மொத்த எரிசக்தி விநியோகத்தில் பாதிக்கும் மேற்பட்டவை ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றன.
உலகின் 49 தலைவர்கள்
இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்க இராணுவ முற்றுகை விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார். மேலும், ட்ரம்ப் ஒரு மணி நேரத்தில் ஏழு கருத்துகளை முன்வைத்தார், அந்த ஏழுமே பொய்யானவை என்றும் அவர் பட்டியலிட்டார்.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க, பிரித்தானியாவின் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இமானுவல் மேக்ரான் உட்பட உலகின் 49 தலைவர்கள் பாரிஸில் முக்கியமான சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மூன்று பக்கத் திட்டமொன்றை செயல்படுத்த தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஈரானியர்கள் தங்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைப்பதற்குப் பிரதிபலமாக, முடக்கப்பட்டுள்ள 20 பில்லியன் டொலர் நிதியை விடுவிப்பது உட்பட இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரானுக்கு நிதி அளிப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல என ட்ரம்ப் மறுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |