தொடரும் டிரம்பின் ஆட்டம்... எம்.பி.க்களுக்கு மிரட்டல்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் வன்முறைக்குத் திட்டம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிரட்டல்கள் வருவது, பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் கலவரங்களை நிகழ்த்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் சமீபத்தில் பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம், கடந்த 6ம் திகதி நடந்தது. ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வன்முறையைத் துாண்டியதாக, டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பிரதிநிதிகள் சபையில் அது நிறைவேறியது.
செனட் சபையில், வரும் பிப்ரவரி 8 ம் திகதி விசாரிக்கப்பட உள்ளது. இதனிடையே, பல நாடாளுமற உறுப்பினர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
கொலை செய்யப் போவதாகவும், நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப் போவதாகவும், பலருக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.
சமூக வலை தளங்களில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் மற்றொரு வன்முறை சம்பவம் நடப்பதை தடுக்க தேவையான ஏற்பாடுகளில் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.