டிரம்ப் பிறப்பித்த புதிய உத்தரவு; பதவியேற்றதும் முதலில் அந்த உத்தரவை திரும்பபெற பைடன் முடிவு
ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பொருந்தக்கூடிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியிலிருந்து வெளியேற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், திங்கட்கிழமையன்று, பிற நாடுகள் மீதான கோவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளில் திருத்தும் செய்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில், ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகளை நீக்குவதாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சீனா மற்றும் ஈரானுக்கு பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 12-ஆம் திகதி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எடுத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் உதவியாளர்களால் விரைவில் நிராகரிக்கப்பட்டது. மேலும், ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்கும்போது இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெறுவார் என்று கூறப்படுகிறது.
CDC-யின் ஜனவரி 12, 2021 உத்தரவை அமல்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பாகவும், அதே நேரம் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இதுவரை அமெரிக்காவுடன் அவர்கள் ஒத்துழைக்காததால் இந்த உத்தரவைப் பிறபித்துள்ளதாக டிரம்ப் காரணம் கூறியுள்ளார்.