அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புலம்பெயர்ந்தோருக்கு 450,000 டொலர்கள் வழங்குவதாக வெளியான தகவல்... உண்மையா?: அவரே கூறிய பதில்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புலம்பெயர்ந்தோருக்கு ஆளுக்கு 450,000 டொலர்கள் வழங்குவதாக வெளியான தகவல் உண்மையானதல்ல என அவரே தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில், அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களின் பிள்ளைகள் சுமார் 5,500 பேர் அவர்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள்.
அப்படி பிரிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதார மற்றும் மனித சேவை அமைப்புகள், கிட்டத்தட்ட ஆளுக்கு 450,000 டொலர்கள் வழங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
ப்ளோரிடாவின் கவர்னரான Ron DeSantis, இப்படி சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குடும்பம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் டொலர்கள் வரை வழங்குவது, அமெரிக்கர்கள் மற்றும் சட்டப்படி அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்துவந்தோரின் கன்னத்தில் அறைவதற்கு சமம் என செவ்வாயன்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடமே நேரடியாக இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பைடன், ஆளுக்கு 450,000 டொலர்களா?, அது நடக்கப்போவதில்லை. அந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறி, அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்!