சுனாமி எச்சரிக்கை? இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தோனேஷியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகா, ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு ஓடி வந்துள்ளனர்.
இது குறித்து அங்கிருக்கும் பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்க பீதியால் ஏராளமான மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர்.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து, சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோவில், மக்கள் நிலநடுக்கம் காரணமாக ஓடுவதையும், இடுபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்கியிருப்பதையும் காண முடிகிறது.
அதுமட்டுமின்றி, நிலநடுக்கத்தால் இரண்டு ஹோட்டல்கள், கவர்னர் அலுவலகம் மற்றும் ஒரு மால் உட்பட சில கட்டிடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.
சுமார் 60 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையில் வீதிக்கு தஞ்சம் புகுந்தனர்.
110,000 மக்கள்தொகை கொண்ட மாமுஜூவுக்கு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால், மாமுஜூவுக்கான பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏஜென்சியின் ஆரம்ப தகவல்கள், மஜீனில் நான்கு பேர் இறந்துவிட்டனர் மற்றும் 637 பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் அண்டை மாகாணமான மாமுஜூவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 24 பேர் பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேஷியா சமீபத்தில், நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகளால் தொடர்ந்து பூகம்பங்களை சந்தித்து வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த வியாழக்கிழமை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மத்திய இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தை உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளை சேதமடைந்துள்ளதாக நாட்டின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் குறைந்தது மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


