தலைக்கு 50 லட்சம் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி! பொலிஸாரால் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத இயக்கம் அந்நாட்டின் வடமேற்கு பகுதிகளில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒபைத், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் இயக்கத்தின் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானில் பொலிஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
மர்தான் மாவட்டத்தில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஃபரித் கான் அவரது வீட்டு முன்பு கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்ட பயங்கரவாதி ஒபைத் என்கிற மெஹ்முத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவரது தலைக்கு 50 லட்சம் பரிசு என கூறப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவின் மர்தானில், நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத எதிர்ப்பு படை பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நபர் ஒருவர் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்கு பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.
Dawn/File
அதன் பின்னர் தான் குறித்த நபர் தேடப்பட்ட வந்த பயங்கரவாதி ஒபைத் என்பது தெரிய வந்தது. முன்னதாக, கடந்த 7ஆம் திகதி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் இயக்கத்தின் மற்றொரு தளபதி லியாகத், ஜம்ருத் தாலுகாவில் நடந்த தேடுதல் நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலீபான் இயக்கமானது பொலிஸார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.