டிடிவி தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்! வெளியான கருத்து கணிப்பு: கடும் பீதியில் அதிமுக அமைச்சர்?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதியில், அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்து கணிப்பு வெளியாகி, அதிமுகவை அதிர வைத்துள்ளது.
வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பிரபலமான ஊடகங்கள் மக்களிடையே இந்த தேர்தல் குறித்தும், அடுத்த முதல்வர் யார் வர வேண்டும் என்பது குறித்தும், கருத்து கேட்டு, அதை சதவீத அடிப்படையில் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரபல தமிழ் ஊடகமான மாலை முரசு நேற்றும் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 52 தொகுதிகளுக்கு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டது.
அதில், திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 11 இடங்களில் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமமுக ஒரு இடத்தில் வெல்லும் என்றும் திமுக அதிமுக இடையே ஆறு இடங்களில் இழுபறி நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமமுக வெல்லும் ஒரு இடம் கோவில்பட்டி எனவும், இங்கு தினகரனுக்கு 34 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு 29 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசனுக்கு 24 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு 4 சதவீதமும், மநீமவிற்கு 3 சதவீதமும் நோட்டாவிற்கு 2 சதவீதமும் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளது.

