முக்கிய கட்டத்தில் இந்த முடிவு சோர்வை அளிக்கிறது: சசிகலா தொடர்பில் டிடிவி தினகரன்
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை தியாகராய நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை, சசிகலாவை அவரது இல்லத்தில் டிடிவி.தினகரன் சந்தித்தார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய தினகரன், அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டது எனக்கே அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது.
அரசியலை விட்டு ஒதுங்குவதாகக் கூறிய சசிகலாவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினேன். அரசியலை விட்டு ஒதுங்காமல் இருந்து பணி செய்ய வேண்டும் என சசிகலாவை கேட்டுக்கொண்டேன்.
சசிகலா தனது அறிக்கை மூலம் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். நான் ஒதுங்கி இருந்தால் தான், எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள் என சசிகலா கூறினார்.
அரசியலை விட்டு ஒதுங்கினால் உடனே பின்னடைவு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என சசிகலா தனது கருத்தைக் கூறியுள்ளார்.
எனது சித்தி என்பதற்காக சசிகலா மீது என் கருத்தைத் திணிக்க முடியாது. எனது சித்தி என்பதற்காக சசிகலாவின் மனசாட்சியாக நான் பேசமாட்டேன்.
சட்டப்போராட்டம் மூலம் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சசிகலா போராடிக் கொண்டிருக்கிறார்.
மார்ச் 10ம் திகதி அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளோம். வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதற்குப் பின் பரப்புரை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
ஆனால், அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள சசிகலாவின் முடிவு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
