கடலில் மிதந்துவரும் உக்ரைன் கண்ணிவெடிகள்! கருங்கடலில் கப்பகளுக்கு ஆபத்து..,
துருக்கியின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஒரு கடல் கண்ணிவெடியை இராணுவ டைவிங் குழு திங்கள்கிழமை செயலிழக்கச் செய்தது.
உக்ரைனில் போருக்கு மத்தியில் சில நாட்களில் அப்பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்ட இரண்டாவது கடல் கண்ணிவெடி இது என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்கேரியா கரைக்கு அப்பால், கண்டெடுக்கப்பட்ட அந்தக் கண்ணி வெடியை நிபுணர் குழு செயலிழக்கவைத்தது.
ரஷ்யத் துருப்பினருக்கு எதிராகக் கடற்பகுதிகளில் உக்ரேன் பொருத்தி வைத்துள்ள பழைய கண்ணிவெடிகளில் சில அறுந்து கடலில் மிதப்பதாக ஒருவாரத்துக்கு முன்னர் ரஷ்யா எச்சரித்தது. அனால், இந்த குற்றச்சாட்டை உக்ரைன் தவறான தகவல் என்று நிராகரித்தது.
முன்னதாக துருக்கிக் கடற்பகுதியில் சென்ற சனிக்கிழமை (மார்ச் 26) முதலாவது கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது. அது இஸ்தான்புல்லின் வடக்கே காணப்பட்டது.
பொதுவாக, நீருக்கடியில் நிறுவப்படும் கண்ணிவெடிகளில், கம்பிகள் அறுந்துவிட்டால், தானாகவே செயலிழக்கும் முறை உள்ளது. ஆனால் பழைய கண்ணிவெடிகளில் அத்தகைய பாதுகாப்பு அம்சம் பொருத்தப்படாமல் இருக்க வாய்ப்பிருப்பதாக துருக்கிய ஊடகம் தெரிவித்தது.
கருங்கடல் தானியங்கள், எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களுக்கான முக்கிய கப்பல் பாதையாகும். இது 16 மில்லியன் மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லின் மையப்பகுதி வழியாக செல்லும் பாஸ்பரஸ் ஜலசந்தி வழியாக மர்மாரா மற்றும் மத்தியதரைக் கடல்களுடன் இணைகிறது. இதனால், மிதந்துவரும் கண்ணிவெடிகள் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கப்பல் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.