பிரித்தானியாவிடம் இருந்து Eurofighter போர் விமானங்கள் வாங்கும் துருக்கி
பிரித்தானியாவிடம் இருந்து 8 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் 20 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்களை வாங்க துருக்கி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
துருக்கியும் பிரித்தானியாவும்
திங்களன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம், துருக்கியும் பிரித்தானியாவும் 40 டைபூன் போர் விமானங்களுக்கான முதற்கட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன,

அவை ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட யூரோஃபைட்டர் கூட்டமைப்பு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டன. குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் ஸ்டார்மர் திங்களன்று அங்காராவில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை சந்தித்தார்.
இஸ்ரேல் போன்ற பிராந்திய எதிரிகளை எதிர்கொள்ள துருக்கி மேம்பட்ட போர் விமானங்களைப் பயன்படுத்த முயல்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றின் மீது இஸ்ரேல் இந்த ஆண்டு தாக்குதலை நடத்தி கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், ஸ்டார்மர் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை எர்டோகன் பாராட்டியதுடன், இது பிரித்தானியா உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய அடையாளம் என்று விவரித்தார்.
பல வருடங்களாக மேற்கத்திய நாடுகளுடன் மிகவும் இணக்கமான உறவுகளை அனுபவித்து வரும் துருக்கி, யூரோஃபைட்டர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. மேலும், துருக்கி தனது விமானப்படையை வலுப்படுத்த, ஓமானிலிருந்து 12 மற்றும் கத்தாரில் இருந்து 12 என 24 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

வலுவான இராணுவ சக்தி
வரும் ஆண்டுகளில் தங்களது சொந்த KAAN போர் விமானங்கள் தயாராகும் முன்னர், இடைவெளியை நிரப்ப விரும்பும் துருக்கி தற்போது யூரோஃபைட்டர் போர் விமானங்கள் மீது தங்கள் பார்வையை திருப்பியுள்ளது.
கடந்த ஆண்டு 7 பில்லியன் டொலர் மதிப்பில் F-16 ரக 40 போர் விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் துருக்கி ஒப்பந்தம் மேற்கொண்டது, ஆனால் அது தாமதங்களைச் சந்தித்து வருகிறது.

பிராந்தியத்திலேயே மிகவும் வலுவான இராணுவ சக்தியான இஸ்ரேல், அமெரிக்கா வழங்கிய நூற்றுக்கணக்கான F-15, F-16 மற்றும் F-35 போர் விமானங்களைக் கொண்டு துருக்கியின் அண்டை நாடுகளான ஈரான், சிரியா, லெபனான் மற்றும் கத்தார் மீது வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இச்சம்பவங்கள் கடந்த ஒரு வருடமாக துருக்கியை பதற்றப்படுத்தியுள்ளது மற்றும் அதன் பாதுகாப்பை புதுப்பிக்க வற்புறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |