மேற்கு வங்கத்திலும் கட்சியை விரிவுபடுத்தும் தவெக
tvk first party office opened in west bengal: மேற்கு வங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்திலும் தவெக
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, 2 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார் முதல்வர் விஜய் .

அதைத்தொடர்ந்து, விஜய் தான் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என தவெக அமைச்சர்களே பேசி வருகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல், தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்த முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கேரளாவின் பாலக்காட்டில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டது.
தற்போது அதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் தவெகவின் புதிய கிளை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
தவெக மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் தலைமை தாங்கி, கட்சி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தவெக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் முதல்வர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சுமார் 40 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அனைவரது தோள்களிலும் தவெக கட்சி துண்டுகள் இருந்தன.
விஜய் பிரதமர் வேட்பாளர் என பேசி வரும் சூழலில், தென் மாநிலங்கள் மட்டுமல்லாது மேற்கு வங்கத்திலும் தவெக கால்பதிப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.