"விஜயுடன் கூட்டணி இல்லை.." சீமான் கருத்து - விஜயின் பேச்சுக்கு தொடர்ந்து எழும் எதிர்ப்புகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நேற்று அக்டோபர் 27ஆம் திகதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய கட்சி தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். இதற்கு பல கட்சி தரப்பில் இருந்து வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.
விஜய்யின் பேச்சுக்கு எழும் எதிர்ப்புகள்
பாஜக தனது சித்தாந்த எதிரி எனவும், திமுக தனது அரசியல் எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். திமுக பற்றிய விஜயின் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என்பதை வரவேற்பதாகவும், நீட், ஆளுநர் விவகாரங்களில் விஜயின் கொள்கைகளை ஏற்கவில்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜயின் கொள்கைகளும் தனது கொள்கைகளும் நேர் எதிரானவை எனவும், விஜயுடன் கூட்டணி இல்லை எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிச் செல்வதாக, விஜயின் பேச்சை குறிப்பிட்டு விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். அத்துடன், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற தங்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரெயிலரைப் பார்த்துட்டு படத்தப் பற்றி மதிப்பிட முடியாது என்று தவெக மாநாடு குறித்து விசிக எம்.பி. ரவிக்குமார் எக்ஸ் பதிவில், பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி அகற்றப்பட வேண்டும் என்பதை விஜய் துணிவுடன் வெளிப்படுத்தி இருப்பதாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரும், விகிதாச்சார இடஒதுக்கீடு தான் உண்மையான சமூக நீதி என குரல் எழுப்பிய விஜய்க்கு வாழ்த்துகள் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் கூறியுள்ளனர்.
கூட்டணி ஆட்சி இருக்கும் என விஜய் அறிவித்திருப்பதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
‘புதிய பயணத்திற்கு வாழ்த்துகள் செல்லம்’ என்று தனது பாணியில் கட்சிக் கொடியுடன் விஜயின் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
All the best Chellam @actorvijay on your new journey.. pic.twitter.com/XUBS0AmYkM
— Prakash Raj (@prakashraaj) October 27, 2024
சாதி, மத, வர்க்க பிரிவினைக்கும், ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக விஜய் அறிவித்திருப்பதை வரவேற்பதாக இயக்குநர் ரஞ்சித் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |