ராகுல் காந்தியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினரா விஜய்? தவெக தரப்பில் விளக்கம்
ராகுல் காந்தியுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினரா என்ற கேள்விக்கு சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
SIRக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணியை(SIR) இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
நவம்பர் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று இந்த பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், SIR படிவம் தவெக தோழர்களுக்கு வழங்கப்படுவதில்லை ஆளும் அரசின் கைப்பாவையாக உள்ள சிலர் இதை செய்கிறார்கள், வாக்குரிமையை பதிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என தவெகவினருக்கு அறிவுறுத்தல் வழங்கி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இன்று, மாவட்ட தலைநகரங்களில் SIR க்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் இணை செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமையிலும், கோவையில் கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராகுல் காந்தியுடன் பேசிய விஜய்?
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் சி.டி.ஆர் நிர்மல் குமாரிடம், ராகுல் காந்தி உடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், அது வதந்தியே அது போன்ற வதந்திகளுக்கு பதில் அளிப்பதில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றால் அது குறித்து அறிவிப்போம்.
பாஜக எங்கள் கொள்கை எதிரி, திமுக எங்கள் அரசியல் எதிரி என தலைவர் விஜய் தெளிவாக அறிவித்துள்ளார். பாஜக உடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது.
விஜய் தான் எங்கள் முதல்வர் வேட்பாளர். விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்று வரும் கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்போம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |