சீமானுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்- தவெக நிர்வாகி
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்த சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக நிர்வாகி சம்பத்குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
"சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன் வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுகளுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டஉயர்நிலை நிர்வாகிகளுக்கு பல பணிகள் உள்ள நிலையில் சீமானைப் போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.
அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் களமாடி வருகிறது. யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரைக் கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்.
சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டு போக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்து விட்டுப் பணியைக் கவனிப்பதே அனைவருக்கும் நல்லது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |