9 வயது சிறுமியை மிருகத்தனமாக..அதிகபட்ச தண்டனை வேண்டும் - தவெக தலைவர் விஜய்
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறுமி படுகொலை
புதுச்சேரியின் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதால் அவரது பெற்றோர் பதற்றமடைந்தனர்.
இதனையடுத்து சாக்கடையில் கிடந்த மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதன் பின்னர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருவரை கைது செய்தனர். சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம் வலுவடைந்துள்ளது.
விஜய் அறிக்கை
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இச்சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'புதுச்சேரி, முத்தியால்பேட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |