மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பதா? மத்திய அமைச்சரின் கருத்துக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்வி நிதி கிடையாது
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ரூ.2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை இந்த நிதியானது தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை.
Union Education Minister Dharmendra Pradhan addressed concerns over the non-allocation of education funds for Tamil Nadu, stating that states must implement the National Education Policy (NEP) to receive central funds. pic.twitter.com/fPpFq7txzR
— The Federal (@TheFederal_News) February 15, 2025
இந்நிலையில் இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பதிலில், தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
விஜய் கண்டனம்
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?” ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
— TVK Vijay (@TVKVijayHQ) February 16, 2025
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம்…
பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |