தவெகவின் சின்னம் என்ன? - விஜய் தேர்வு செய்துள்ள 5 சின்னங்கள்
தவெகவிற்கு சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
விஜய் மீண்டும் பிரச்சாரம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.

2026 தேர்தலை குறிவைத்து களம் இறங்கியுள்ள தவெக தலைவர் விஜய்யும் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்தார்.
கரூரில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் தற்போது வரை நேரில் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 27 ஆம் திகதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினராய் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வைத்து சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, நவம்பரில் விஜய் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தனது பிரச்சாரங்களில், ஆளும் திமுக அரசு மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து பேசி வருகிறார்.
மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தை மக்களிடம் கூறி வாக்கு சேகரிக்கும் வகையில், விஜய்யும் விரைவில் சின்னத்தை பெற்று அடுத்த பிரச்சாரத்தில் அதை கூறி வாக்கு கேட்டு மக்களிடம் தனது சின்னத்தை பிரபலப்படுத்த உள்ளார்.
தவெகவின் சின்னம்
இதற்காக தங்களுக்கு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் சின்னம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். தற்போதைய 16வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10 அன்று முடிவடைகிறது.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கும்.
தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 184 சின்னங்களில் ஏதேனும் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது புதிய 3 சின்னங்களை முன்மொழிந்து, அவற்றில் ஒன்றை அங்கீகரிக்கும்படி கோரலாம்.
விஜய் இளம் தலைமுறையினரை கவரும் வகையில், ஆட்டோ, கிரிக்கெட் பேட், உலக உருண்டை, பட்டம் மற்றும் அகல் விளக்கு உள்ளிட்ட சின்னங்களை விண்ணப்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |