யாரையும் இனி பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் - விஜய் சூளுரை
பூத் முகவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களுக்கு சமமானவர்கள் என விஜய் பேசியுள்ளார்.
தவெக பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த கருத்தரங்கில், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விஜய் பேச்சு
இதில் பேசிய விஜய், "கோவை என்றாலே அந்த பகுதி மக்களின் மரியாதைதான் முதலில் நினைவுக்கு வரும். பூத் முகவர்களுக்கான பயிற்சி பட்டறை என்றாலே ஓட்டு தொடர்புடையது என நினைக்க வேண்டாம்.
தேர்தல் அரசியலில் அதுவும் முக்கியம்தான். ஆனால், அதையும் தாண்டி மக்களுடம் எப்படி தொடர்பில் இருக்கப்போகிறோம், ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்ய போகிறோம் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி பட்டறை.
நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மட்டுமே. இதற்கு முன்னர் நிறைய பேர் வந்து இருக்கலாம். போய் இருக்கலாம்.
போர் வீரர்களுக்கு சமம்
பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்து இருக்கலாம். அதற்கு நாம் வரவில்லை. இனிமேல் அப்படி நடக்காது. நடக்கவிடப்போவது கிடையாது.
நம் கட்சி மீது நல்ல நம்பிக்கை கொண்டு வரப்போவது பூத் கமிட்டி முகவர்கள்தான். பூத் முகவர்கள் போர் வீரர்களுக்கு சமமானவர்கள்.
நாம் அரசியலுக்கு எப்படி வந்திருக்கோம், ஏன் வந்திருக்கோம் அரசியல் அனுபவம் இருக்கா என மக்கள் கேட்பார்கள். நம்மிடம் என்ன இல்லை, கரை படியாத அரசியல் செய்யும் லட்சியம் இருக்கிறது.
மனதில் நேர்மை, பேசுவதற்கு உண்மை, உழைப்பதற்கு தெம்பு, செயல்படுவதற்கு திறமை ஆகியவற்றுடன் களம் தயாராக உள்ளது. இதற்கு மேல் என்ன வேண்டும். களத்தில் சென்று கலக்குங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்” என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |