இறுதியில் டிரம்பை கைவிட்டது டுவிட்டர்: கலவரத்தை தூண்டலாம் என அச்சம்
அமெரிக்காவில் எதிர்வரும் நாட்களில் டொனால்டு டிரம்ப் கலவரத்தை தூண்டும் வாய்ப்புள்ளதாக கூறி அவரது டுவிட்டர் கணக்கை மொத்தமாக முடக்கியுள்ளது அந்த நிறுவனம்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, ஜோ பைடனுக்கான முக்கிய அறிவிப்பை தடுத்து நிறுத்த டிரம்ப் ஆதரவாளர்கள் முயன்றனர்.
இச்சம்பவம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், டுவிட்டரில் காணொளி ஒன்றை வெளிய்யிட்டு, அனைவரும் அமைதியாக வீடு திரும்புங்கள் என்றார்.
அத்துடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் சமூக ஊடகங்களையே பெரிதும் பயன்படுத்தி வந்தார்.
பெரும்பாலும் தமது கோபத்தை கொட்டுவதாக அவரது டுவிட்டர் பதிவுகள் அமைந்தது. மட்டுமின்றி தவறான கருத்துகளை அவர் தமது டுவிட்டர் மூலம் பரப்பவும் செய்தார்.
88.7மில்லியன் டுவிட்டர் பிந்தொடர்பாளர்களை கொண்ட டொனால்டு டிரம்ப், கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர், மொத்தமும் மோசடி முறைகேடு என்றே பதிவு செய்து வந்துள்ளார்.
மட்டுமின்றி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் அறிவிக்கப்படும் நாளில் தமது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் திரள வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
தற்போது டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதற்கு முன்னர், வன்முறை என்பது தவிர்க்க முடியாதது என்று அவர் குறிப்பிட்டார்.
வெற்றியை நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்ததாக மீண்டும் கூறியுள்ள டிரம்ப், இவ்வளவு காலமாக மோசமாக மற்றும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட பெரிய தேசபக்தர்களிடமிருந்து வெற்றி மோசமாக பறிக்கப்பட்டது என்றார்.
அமைதியுடன் குடியிருப்புக்கு திரும்புங்கள், ஆனால் இந்த நாளை வாழ்க்கையில் மறக்க வேண்டாம் என்றார் டொனால்டு டிரம்ப்.
