நண்பர் வீட்டு விசேஷத்துக்காக ஒன்றிணைந்த இரண்டு குடும்பங்கள்... விமானம் விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட பயங்கரம்
குழந்தை ஒன்றின் ஞானஸ்நான நிகழ்வுக்காக இரண்டு குடும்பங்கள் இணைந்த நிலையில், அவர்கள் பயணித்த விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.
பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும், ரொமேனியாவின் செல்வந்தர்களில் ஒருவருமான Dan Petrescu (68), அவரது மனைவி Dorotea Petrescu Balzat (65) மற்றும் அவரது மகனான Dan Stefano (30) ஆகியோர், Petrescuவின் நண்பரான இத்தாலியைச் சேர்ந்த Filippo Nascimbene (32)இன் மகனான Rafaelஇன் ஞானஸ்நான நிகழ்ச்சிக்காக இத்தாலிக்கு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் மற்றும் Filippoவின் மனைவி Claire Stephanie Caroline மற்றும் Carolineஇன் தாய் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, மிலன் நகரில் திடீரென அந்த விமானம் தலைகுப்புற விழுந்திருக்கிறது. வேகமாக விழும்போதே தீப்பற்றிய அந்த விமானம், கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு கட்டிடத்தில் மோதி நொறுங்கியிருக்கிறது.
அந்த விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி, கார் ஒன்றிலுள்ள டேஷ் கேம் கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பிறந்து, சற்று முன்புதான் ஞானஸ்நானம் பெற்ற குழந்தை Rafael உட்பட அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள்.
அந்த விமானம் விழுந்த கட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்திருக்கிறது. நல்ல வேளையாக அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த கட்டிடத்தில் யாருமில்லை. இல்லையென்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கக்கூடும்.
தீயணைப்பு வீரர்கள் அந்த கட்டிடத்தில் விமானம் விழுந்ததால் பிடித்த தீயை அணைத்திருக்கிறார்கள். அந்த கட்டிடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விமானத்தில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.