பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி
பிரித்தானியாவில் யூத சமூகத்திற்கு எதிராக ஐ.எஸ் அமைப்பால் தூண்டப்பட்ட தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானோரைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்றில் பதிவாகியிருக்கும்
கடந்த அக்டோபர் மாதம் மான்செஸ்டரில் உள்ள ஒரு யூத வழிபாட்டுத் தலத்தில் நடந்த ஒரு தாக்குதலை அடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 38 வயதான வாலித் சாதாவி மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர்,

தங்களால் இயன்றவரை அதிக யூதர்களைக் கொல்ல தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்த விரும்பிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று காவல்துறையினரும் சட்டத்தரணிகளும் தெரிவித்தனர்.
அவர்களின் திட்டம் செயலுக்கு வந்திருந்தால், பிரித்தானியாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் சம்பவமாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிட்னியின் போண்டி கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, பிரித்தானியாவில் இந்த இருவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சிட்னி சம்பவத்தை பெருமையின் ஆதாரம் என்றே ஐ.எஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அச்சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை.
உண்மையில், ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஐ.எஸ் அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்தியபோது இருந்த அதே அச்சுறுத்தலை அந்த அமைப்பு தற்போது ஏற்படுத்தவில்லை என்றாலும்,
ஐ.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்-கொய்தா குழுக்கள் மீண்டும் வெளிநாடுகளில் வன்முறையை விதைக்க முயல்வதாகவும், இணையம் வழியாகத் தாக்குதல் நடத்தத் துணிபவர்களைத் தீவிரமயமாக்குவதாகவும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
தாங்கள் குற்றமற்றவர்கள்
இந்த நிலையில், சாதாவி மற்றும் ஹுசைன் ஆகியோர் ஐ.எஸ் அமைப்பின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களாகவும், தியாகிகளாக மாறுவதற்காகத் தங்கள் உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருந்ததாகவும் பிரித்தானிய சட்டத்தரணிகள் நடுவர் மன்றத்திடம் தெரிவித்தனர்.

மே 2024-ல் சாதாவி கைது செய்யப்பட்டபோது, டோவர் துறைமுகம் வழியாக இரண்டு தாக்குதல் துப்பாக்கிகள், ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் கிட்டத்தட்ட 200 தோட்டாக்களை பிரித்தானியாவுக்குள் கடத்தி வர அவர் ஏற்பாடு செய்திருந்தார் என்று அரசு தரப்பு சட்டத்தரணி ஹர்ப்ரீத் சந்து தெரிவித்துள்ளார்.
ஆனால், சாதாவி மற்றும் ஹுசைன் இருவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றே வாதிட்டுள்ளனர். மேலும், சாதாவி தனது உயிருக்கு பயந்துதான் அந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாரான ஒரே ஒரு குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |