இத்தாலியை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த 2 மில்லியன் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டம்
காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலி முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பா முழுவதும்
காஸா மக்களுக்கான உதவிப் பொருட்களுடன் பயணப்பட்ட Global Sumud Flotilla படகுகளை புதன்கிழமை இஸ்ரேலிய கடற்படையினர் தடுத்து நிறுத்திய நிலையிலேயே, வெள்ளிக்கிழமை இத்தாலியின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் கடற்படையின் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகளவில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்திருந்தாலும், இத்தாலியில் மட்டும் பெருமளவு மக்கள் திரண்டனர்.
ஆனால், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும், இச்சம்பவம் நாடு முழுவதும் பரவலான இடையூறுகளை ஏற்படுத்தும் என்று கருதிய அவர், இது அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் தனது வலதுசாரி அரசாங்கத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் என்றும் கூறினார்.
இத்தாலி விளையாட
CGIL தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ரோம் நகரின் தெருக்களில் மட்டும் 300,000 பேர் பேரணி நடத்தினர் என குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அனைத்து முக்கிய சேவைகளும் நிறுத்தப்பட்டன.
காஸாவில் நடக்கும் போர் காரணமாக இஸ்ரேலுக்கு எதிரான உலகக் கிண்ணம் தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலி விளையாடக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை, வடக்கு நகரமான மிலனில் நடந்த பேரணியில் சுமார் 100,000 பேர் பங்கேற்றனர். நகரின் பிரதான சாலையைத் தடுத்த போராட்டக்காரர்கள் குழு ஒன்று பொலிசார் மீது போத்தல்களை வீசத் தொடங்கியதைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் மோதல்கள் வெடித்தன.
இதனிடையே, காஸா போருக்கு எதிராக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் சனிக்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |