புடினை நேரடியாகத் தொடர்புகொண்ட இரு ஐரோப்பியத் தலைவர்கள்: உக்ரைன் தொடர்பில் வலியுறுத்தல்
Two Nordic leaders urge Putin to end Ukraine war: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புடினை இரண்டு நார்டிக் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பின்லாந்து மற்றும் நோர்வே தலைவர்கள் செவ்வாயன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
முடிவுக்குக் கொண்டுவர
ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடித் தொடர்பைத் தவிர்த்து வந்த, மேற்கு ஐரோப்பியத் தலைவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த நடைமுறைக்கு இதனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோயர் ஆகியோரின் அழைப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவிற்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை மாற்றிய பின்னர்,
உக்ரைனுடனான அமெரிக்க உறவுகள் 18 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியதை அடுத்து, தூதரக செயல்முறையில் செல்வாக்கு செலுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவரும் ஸ்டப்பும் புடினுடன் சுமார் 90 நிமிடங்கள் பேசியதாகவும், பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் பேசியதாகவும் பிரதமர் ஸ்டோயர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு அடுத்த மாதம் அபுதாபியில் ரஷ்ய, உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள முதல் அமைதிப் பேச்சுவார்த்தைகளுடன் இந்த முன்னெடுப்பை இரு ஐரோப்பியத் தலைவர்களும் கூட்டறிக்கையூடாக தொடர்புபடுத்தியுள்ளனர்.
2022 பிப்ரவரியில் ரஷ்யாவின் படையெடுப்புடன் தொடங்கிய போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பதில் ரஷ்யாவும் உக்ரைனும் பெரும் கருத்து வேறுபாட்டில் உள்ளன.

மேலும், இந்த ஆண்டு இரு தரப்பினரின் தொலைதூர வான்வழித் தாக்குதல்களும் அதிகரித்துள்ள நிலையில், போர்க்கள எல்லைகள் பெரும்பாலும் நிலையாகவே இருந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜனாதிபதி ஸ்டப் தெரிவிக்கையில், (புடினுடனான) தொலைபேசி உரையாடல் வெளிப்படையாகவும் சாராம்சம் நிறைந்ததாகவும் இருந்தது. நாங்கள் ரஷ்யாவின் அண்டை நாடுகள். இந்தப் போரின் விளைவு நமது மற்றும் பரந்த ஐரோப்பியப் பாதுகாப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடிப் பேச்சுவார்த்தைகள் தேவை என்றும் கூறியுள்ளார். பதற்றத்தைத் தணிப்பதன் முக்கியத்துவத்தை தானும் ஸ்டப்பும் வலியுறுத்தியதாக ஸ்டோயர் கூறியுள்ளார். இருவரும் உக்ரைனுக்கு வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த முன்னெடுப்பு குறித்து அனைத்து மேற்கத்திய நட்பு நாடுகளுடனும் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஸ்டப் கூறியுள்ளார். மேலும், உக்ரைன் ஒரு புதிய தகவல் தொடர்பு வழியைத் திறக்கக் கோரியுள்ளதாகவும், ரஷ்யாவைப் புறக்கணித்து அமைதி முயற்சிகளுக்கு ஐரோப்பா இனிமேலும் ஒரு பார்வையாளராக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ரஷ்யா தரப்பில் இருந்து வெளியாகியுள்ளத் தகவலில், புடினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றே தெரிய வருகிறது. மேலும், ரஷ்யாவின் நியாயமான நலன்கள் முழுமையாகவும் நிபந்தனையின்றியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே, ஒரு நேர்மையான மற்றும் நீண்டகால அமைதியை அடைவது சாத்தியமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நாடுகளின் மோதல் போக்குக் கொள்கைகள் குறித்தும், இக்கொள்கைகள் போர் நடவடிக்கைகளின் நீடிப்புக்குக் காரணமாக அமைவதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் மோதல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உரையாடலில் புதிதாக ஏதுமில்லை என்றும், போர் தீவிரமடையக்கூடும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்; மேலும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை செயல்பாட்டில் தங்களுக்கு ஒரு பங்கினைப் பெறவே முயல்கின்றன என்றும் அவர் கூறினார்.
மேற்கு ஐரோப்பியத் தலைவர்கள் புடினைத் தனிமைப்படுத்தும் நோக்கில், அவருடன் பேசுவதைத் பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுக்கும் அமைதி முயற்சிகளில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
பல ஐரோப்பிய நாடுகளில் ட்ரம்ப், கணிக்க முடியாத ஒருவராகக் கருதப்படுவதோடு, உக்ரைனுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் புடினுக்குச் சாதகமாகச் செயல்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.