தைவானை நோக்கி சீறி வரும் சாம்ப்பி புயல்: நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து
Hundreds of flights cancelled across East Asia: கிழக்கு ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சக்திவாய்ந்த சாம்ப்பி புயல் நெருங்குவதால், தைவான் நிர்வாகம் தரைவழி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கிட்டத்தட்ட 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு முழுவதும் நீடிக்கும்
இந்தப் புயல் இன்று தைவான் மற்றும் ஜப்பானின் ஒகினாவா தீவுகளைக் கடந்து செல்லும் என்றும், பின்னர் வார இறுதியில் வடக்கு நோக்கி கிழக்கு சீனா மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்ப்பி புயலின் வெளிப்புற மழை மேகங்கள் இன்று காலை தைவானை நெருங்கி வருவதனால் அந்தத் தீவில் பலத்த மழையும், கடுமையான காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வானிலை நிர்வாகத்தின் தகவல்படி, புயலின் 320 கிலோமீற்றர் சுற்றளவு இன்று தைவானின் பெரும்பகுதியை உள்ளடக்கும். சாம்ப்பி புயல் சனிக்கிழமை பிற்பகுதியில் தெற்கு ஜப்பானை நோக்கி நகர்ந்து செல்வதற்கு முன்பு, அதன் உச்சகட்ட தாக்கம் இரவு முழுவதும் நீடிக்கும்.
தைவான் முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், வடக்கு மற்றும் வடகிழக்கு தைவானின் மலைப்பகுதிகளில் 900 மி.மீ வரை மழைப்பொழிவும், பியூஃபோர்ட் அளவுகோலில் மிக உயர்ந்த அளவான 12-ஆம் நிலை வரை பலத்த காற்று வீசுவதும் நிகழக்கூடும்.
ஒரு கட்டத்தில் சூப்பர் புயலாகவும், இந்த ஆண்டின் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிக வலிமையான புயல்களில் ஒன்றாகவும் இருந்த சாம்ப்பி, வியாழக்கிழமையன்று சற்று வலுவிழந்தாலும், அதன் மையப்பகுதிக்கு அருகில் மணிக்கு 227 கி.மீ (141 மைல்) வேகத்திற்கும் அதிகமான சூறாவளிக் காற்று வீசியது.
கடலோர நகரங்களுக்கு 6 மீற்றருக்கும் (20 அடி) அதிகமான உயரத்திற்கு அலைகள் எழும் என அலைபேசி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், தைபேக்கு அருகிலுள்ள மலைகள் உட்பட வடக்கு மலைப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு மீற்றர் (3 அடி) மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையன்று 125 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள் என்றும் தைவானின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 262 எனவும், வெள்ளிக்கிழமை அன்று சேவை முன்னெடுக்கவிருந்த சர்வதேச விமானங்களில் 600 எண்ணிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்வே மற்றும் படகு சேவையும் முடக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த புயலுக்கு முன்னதாக சில நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் யாரும் வெளியேற்றப்பட்டதாக இதுவரை தகவல் வரவில்லை என உள்விவகார அமைச்சகம் கூறியுள்ளது.
ஜப்பானின் தற்காப்பு
தைவான் பொதுவாக புயல்களை எதிர்கொள்ள நன்கு தயாராக இருப்பதால், உயிரிழப்புகள் குறைவாகவே இருக்கின்றன. கோடைக்காலத்தில் இவை அதிகமாகக் காணப்பட்டாலும், இலையுதிர் காலத்திலும் புயல்கள் தாக்கக்கூடும்; அப்போது அவை பலத்த காற்றையும் கனமழையையும் கொண்டு வரும்.

ஜப்பானில், ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ மற்றும் ஸ்கைமார்க் ஆகிய முக்கிய விமான நிறுவனங்கள், வியாழன் முதல் ஞாயிறு வரை பெரும்பாலும் உள்நாட்டு விமானங்களான 100-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளன. இதனால் 11,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்கு அருகிலுள்ள ஜப்பானியத் தீவுகளைச் சுற்றி நடைபெற்று வரும் 'கீன் ஸ்வார்ட்' (Keen Sword) எனும் முக்கிய ராணுவப் பயிற்சியை, நெருங்கி வரும் புயல் சீர்குலைத்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஒத்திகையானது, ஏவுகணைத் தடுப்புப் பயிற்சிகள் மற்றும் கடல்-நிலம் ஒருங்கிணைந்த தரையிறக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் ஜப்பானின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.

திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஒத்திகையில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 56,000 வீரர்களுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் ஐந்து நாடுகளின் படைகளும் பங்கேற்றுள்ளன.
சாம்ப்பி புயலானது இந்த ஆண்டில் ஜப்பானைத் தாக்கும் 30-வது சூறாவளியாகும்; 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு, இவ்வளவு அதிகமான சூறாவளிகளை ஜப்பான் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
பிலிப்பைன்ஸில் இந்தப் புயல் ரோசல் என்று அழைக்கப்படுகிறது, இது அகரவரிசைப்படி பெயரிடும் முறையைப் பின்பற்றுகிறது. அதாவது, அகரவரிசையின் இறுதி வரை இன்னும் எட்டு புயல்கள் வரவிருக்கின்றன.