இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசாவா? மறுப்பு தெரிவித்துள்ள அமீரகம்
இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசா வழங்குவதாக வெளியான தகவலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வாழ்நாள் கோல்டன் விசா?
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019 ஆம் ஆண்டு கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்படி, அங்குள்ள ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்களில் அதிக முதலீடு செய்பவர்கள் மற்றும் புகழ்பெற்ற நடிகர்கள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, AED 1,00,000 (இந்திய ரூபாயில் சுமார் 23.4 லட்சம்) செலுத்தி, வாழ்நாள் விசா பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாகவும், முதல் கட்டமாக இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியானது.
மேலும், இந்தியாவில் இதற்கான செயல்பாட்டை Rayad Group எனும் கான்சல்டிங் நிறுவனம் வழிநடத்தும் எனவும் கூறப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம்(ICP) இந்த தகவலை மறுத்துள்ளது.
இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், "கோல்டன் விசாவிற்கான விண்ணப்பங்கள் அரசாங்க வழிகள் மூலம் மட்டுமே கையாளப்படுகின்றன. விண்ணப்ப செயல்பாட்டில் எந்தவொரு உள் அல்லது வெளிப்புற ஆலோசனை நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட தரப்பாக அங்கீகரிக்கப்படவில்லை.
இது போன்ற மோசடி திட்டங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.விசா தொடர்பான தகவல்களுக்கு அரசாங்க இணையதளத்தை மட்டும் அணுக வேண்டும்" என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |