நடுக்கடலில் வைத்து பிரபல நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பல் கடத்தல்! அதிகரிக்கும் பதட்டம்
ஏமன் கடலில் வைத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் சரக்கு கப்பல் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் துறைமுக நகரமான ஹொடைடா அருகே வைத்து கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடியுடன் கூடிய ரவாபி என்ற சரக்குக் கப்பலை, ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் ஏமனின் ஹொடைடா நகரிலிருந்து கடத்திச் சென்றுள்ளனர் என அரபு கூட்டுப்படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Socotra தீவில் உள்ள சவுதி மருத்துவமனைக்கான மருத்துவ உபகரணங்களை இந்தக் கப்பல் ஏற்றிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
ஹவுத்தி போராளிகள் உடனடியாக கப்பலை ஒப்படைக்கும் படி சவுதி தலைமையிலான அரபு கூட்டுப்படை வலியுறுத்தியுள்ளது.
மேலும் கப்பலை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் படைகளை களமிறக்குவோம் என கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அரபு கூட்டுப்படை மற்றும் ஹவுத்தி போராளிகளுக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, கப்பல் கடத்தப்பட்டுள்ளதால் இரு தரப்புக்கும் இடையேயான பதட்டம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.