உலகிலே சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு இது தான்! முதலிடம் பிடித்த நாடு: வெளியான பட்டியல்
உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் பட்டியல் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது.
உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால், அதற்கு பல வழிகள் உண்டு, இருப்பினும் விமானத்தில் பறந்து ஒவ்வொரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் என்பது பலரின் ஆசையாக உள்ளது.
ஆனால், அதற்கு கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) மிகவும் முக்கியம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் கடவுச்சீட்டு தேவை, அது தான் உங்களை அந்த நாட்டிற்குள் நுழைய வைக்கும் ஒரு நுழைவுச் சீட்டு என்று கூட கூறலாம்.
அந்த வகையில், தற்போது உலகில் சக்தி வாய்ந்த, அதாவது அதிக நாடுகளுக்கு செல்லக் கூடிய நாடுகளின் பாஸ்போர்ட் பட்டியலை, Arton Capital வெளியிட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்கு சில சலுகைகளுடன் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 98 நாடுகளுக்கு விசா இல்லாமலும், 54 நாடுகளுக்கு அங்கு சென்ற பின் விசா கொடுப்பதும், 46 நாடுகளுக்கு நுழைவதற்கு முன்பு விசா என்ற வசதியும் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில், Arton Capital வெளியிட்டுள்ள பட்டியலின் படி நியூசிலாந்து நாட்டின் கடவுச்சீட்டு உள்ளது. நியூசிலாந்து கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் 146 நாடுகளுக்கு செல்லலாம்.
மூன்றாவது இடத்தில், ஜேர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, லக்சம்பர்க், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 144 நாடுகளுக்கு செல்லலாம். அதே சமயம் இந்த நாட்டின் விசா விதிமுறைகள் தற்போது எப்படி உள்ளது என்பது சரியாக தெரியவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், இஸ்ரேலின் பாஸ்போர்ட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக அதிசக்தி வாய்ந்ததாக உள்ளது.
உலக அளவில் 17-வது இடத்தை பிடித்துள்ள இஸ்ரேல் கடவுச்சீட்டு, 89 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு மற்றும் 37 நாடுகளில் இறங்கிய பின்பு விசா, 72 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன் விசா என்ற வாய்ப்பை கொடுக்கிறது.
இதே போன்று உலகிலே மிகவும் வலிமை குறைந்த கடவுச்சீட்டாக ஆப்கானிஸ்தான் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஈராக், சிரியா, பாகிஸ்தான், சோமாலியா, ஏமன், மியான்மர் உள்ளது குறிப்பிடத்தக்கது.