பிரான்ஸ் உடனான ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை
பிரான்ஸிடமிருந்து 80 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் (Pavel Durov) பிரான்சில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 புதன்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்தது.
இந்த தடை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் இடையேயான இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் 2021-ஆம் ஆண்டில் 80 போர் விமானங்களை வாங்க பிரெஞ்சு விமான நிறுவனமான டசால்ட் உடன் ஒப்பந்தம் செய்தது. அவை 2027-க்குள் வழங்கப்பட வேண்டும்.
துரோவின் கைது காரணமாக பிரான்சுடனான அனைத்து இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இப்போது பரிசீலித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஜுக்கர்பெர்க்
ரஷ்யாவில் பிறந்த துரோவ் 2013-ஆம் ஆண்டில் தனது சகோதரருடன் இணைந்து டெலிகிராம் நிறுவனத்தை நிறுவினார். இவர் ரஷ்யாவின் ஜுக்கர்பெர்க் என்றும் அழைக்கப்படுகிறார்.
ரஷ்ய அரசாங்கம் ரஷ்ய மக்கள் குறித்த தரவுகளைக் கேட்ட பின்னர் அவர் 2014-இல் நாட்டை விட்டு வெளியேறி செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸின் குடியுரிமையைப் பெற்றார்.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் குடியுரிமை பெற்றார். அவர் கைது செய்யப்படும் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துரோவின் மறைவிடமாக இருந்தது. இவ்வாறு டெலிகிராமை நிறுவிய பின்னர் துரோவ் பல நாடுகளில் வசித்து வந்தார்.
டெலிகிராமின் தலைமையகத்தை 2017-ஆம் ஆண்டில் துபாயில் கட்டினார். இந்த நேரத்தில் அவருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை கிடைத்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 இல், Pavel Durov பிரெஞ்சு குடியுரிமையையும் பெற்றார்.
துரோவுக்கு தூதரக உதவியை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முயற்சி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் துரோவுக்கு தூதரக உதவியை வழங்க பிரெஞ்சு அதிகாரிகளையும் தொடர்பு கொண்டுள்ளது. "துரோவின் வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கள் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மிக முக்கியமானது. ' என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துரோவின் கைதுக்குப் பிறகு பிரான்ஸ்-ரஷ்யா உறவுகள் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளன என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகஸ்ட் 27 அன்று கூறினார்.
"துரோவின் கைதுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான உறவுகள் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளன.
டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக பிரான்ஸ் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது, அதை நிரூபிக்க சமமான தீவிர ஆதாரங்கள் தேவைப்படும்.' என்று அவர் கூறியுள்ளார்.
டெலிகிராமில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக பொருட்களை பரிமாறிக் கொண்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஊக்குவித்ததாகவும் துரோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகவல்களை பகிர்ந்து கொள்ளாததற்காக அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) கைது செய்யப்பட்டார்.
பிரெஞ்சு சட்டத்தின்படி, துரோவை 4 நாட்கள் வரை தடுத்து வைக்க முடியும். இந்நிலையில், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |